அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக திகழக்கூடிய ஆடி மாதத்தில் அம்மன் நம் வீடு தேடி வருவதற்கும் நம் வீட்டில் அனைத்து விதமான மங்களங்களும் நிறைந்திருக்கவும் கண்டிப்பான முறையில் ஒரே ஒரு முறையாவது சுமங்கலி பூஜையை நம்முடைய வீட்டில் செய்ய வேண்டும். பொதுவாகவே வருடத்தில் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ சுமங்கலி பூஜையை வீட்டில் செய்வதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற முடியும். சுபகாரிய தடைகள் அனைத்தும் விலகும் என்று கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட சுமங்கலி பூஜை என்பது நவராத்திரி சமயத்திலோ அல்லது அம்மனுக்கு உகந்த நாட்களிலோ செய்வது மிகவும் சிறப்பு. சுமங்கலி பூஜை செய்யும் பொழுது அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைப்பது வழக்கமாகவே இருக்கும். இப்படி நாம் அழைப்பது மூலம் அம்மனே நம் வீடு தேடி சுமங்கலி ரூபத்தில் வந்து நம்முடைய பூஜையை ஏற்றுக் கொண்டு நமக்கு வேண்டிய வரத்தை அருள்வாள் என்று ஒரு நம்பிக்கையின் நிலவுகிறது. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் எளிமையான முறையில் சுமங்கலி பூஜையை எப்படி செய்வது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுமங்கலி பூஜை செய்யும் முறை
முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். மறுநாள் சுமங்கலி பூஜையை மாலை நேரத்தில் செய்வது தான் சிறப்பு என்பதால் அருகில் இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைக்க வேண்டும். அவ்வாறு அழைக்கும் பொழுது அவர்களுக்கு குங்குமத்தை கொடுத்து அழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினம் சுமங்கலி பூஜை செய்வதற்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு எந்த இடத்தில் சுமங்கலி பூஜை செய்கிறோமோ அந்த இடத்தில் வெற்றிலை, அரச இலை அல்லது வாழை இலை இவை மூன்றில் ஏதாவது ஒரு இலையை 9 எண்ணிக்கையில் வைத்து அதில் ஒன்பது அகல் விளக்குகளை வடக்கு திசை பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ளுங்கள். சுமங்கலி பெண்கள் அமர்வதற்குரிய இடத்திலும் மஞ்சள் தண்ணீரை தெளித்து சுத்தம் செய்து அவர்களுக்கு மனைபலகை அல்லது விரிப்பு போன்றவற்றை விரித்து தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
சுமங்கலி பெண்கள் வீட்டிற்கு வரும்பொழுது அவர்களுக்கு முதலில் குங்குமத்தை கொடுத்து தண்ணீரை கொடுத்து அவர்களுக்கு உரிய இடத்தில் அவர்களை அமர வைக்க வேண்டும். அவர்களை அமர வைத்த பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் ஒன்பது விளக்குகளையும் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு சுமங்கலி பெண்களின் நெற்றியில் குங்குமத்தை வைத்து அவர்களுக்கு மாலை சூட்டி அவர்கள் கையில் வளையல் அணிவித்து அவர்களுக்கு பாத பூஜை செய்ய வேண்டும்.
அவ்வாறு பாத பூஜை செய்யும் பொழுது அம்மனுக்கே பாத பூஜை செய்வது போல் உணர்ந்து மனதார செய்ய வேண்டும். இவ்வாறு செய்து முடித்த பிறகு திரும்பவும் அவர்கள் நெற்றியில் குங்குமத்தை வைத்து அவர்களுக்கு தீப ஆரத்தி காட்டி அவர்களின் காலை தொட்டு வணங்க வேண்டும். இவ்வாறு எத்தனை சுமங்கலி பெண்களை அழைத்தோமோ அத்தனை பேருக்கும் செய்து விட்டு அவர்களுக்கு அறுசுவை உணவு விருந்து அளிக்க வேண்டும். கடைசியாக அவர்களின் கையில் தாம்பூலத்தை கொடுத்து வழி அனுப்ப வேண்டும். அவ்வாறு கொடுக்கக்கூடிய தாம்பூலத்தில் மஞ்சள், குங்குமம், வளையல், மருதாணி, ஜாக்கெட் துணி, பூ, வெற்றிலை பாக்கு, பழங்கள் இவற்றில் எது தங்களால் முடியுமோ அதை வைத்துவிட்டு அதனுடன் 11 அல்லது 51 ரூபாயை வைத்து தர வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதலை நிறைவேற்றும் தீபங்கள்
இப்படி ஆடி மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாம் செய்வதன் மூலம் சுமங்கலி பெண்களின் ரூபத்தில் அம்மனே நம் வீடு தேடி வந்து நமக்கு அனைத்து விதமான வளங்களையும் அருள்வாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.