கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமையும், உகந்த திதியாக சஷ்டி திதியும், உகந்த நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரம் திகழ்கிறது. மற்ற நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறோமோ இல்லையோ இந்த மூன்று நாட்களிலும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது அளவிலான நன்மைகளை நம்மால் பெற முடியும். அப்படி முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருக பெருமானுக்காக நாம் தீபம் ஏற்றும் வழக்கத்தை வைத்திருப்போம். எந்த தீபங்களை ஏற்றுவதன் மூலம் என்னென்ன பலன் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் தீபங்கள்
எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து பிறகுதான் வழிப்பாட்டை செய்ய ஆரம்பிப்போம். அப்பொழுது தான் அந்த வழிபாட்டிற்குரிய முழுமையான பலனை நம்மால் பெற முடியும் அல்லது அந்த வழிப்பாட்டிற்குரிய பலன் பல மடங்கு நமக்கு கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக தான் தீபங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு விதமான தீபங்களை ஏற்றும் வழக்கம் இருக்கும். அந்த வகையில் முருகப் பெருமானுக்கு எந்தெந்த தீபங்களை ஏற்ற வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றதும் பலருக்கும் நினைவில் வருவது வெற்றிலை தீபம் அல்லது துவரம் பருப்பு தீபம் தான். ஆனால் அதையும் தவிர்த்து வேறு சில தீபங்களும் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒரு தீபமாக கருதப்படுவது தான் மா விளக்கு தீபம். வீட்டிலேயே மாவிளக்கை தயார் செய்து அதிலும் திணை அரிசியை பயன்படுத்தி திணை மாவிளக்கை தயார் செய்து முருகப்பெருமானுக்கு முன்பாக வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு சகல நன்மைகளும் உண்டாவதோடு சௌபாக்கியங்கள் நிறைந்த சுகமான வாழ்க்கையை வாழ முடியும்.
அடுத்ததாக வேலை கிடைக்க வேண்டும், அரசாங்க வேலை கிடைக்க வேண்டும், வேலையில் முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று எந்த கோரிக்கையாக இருந்தாலும் ஒரு தட்டில் துவரம் பருப்பை பரப்பி அதற்கு மேல் இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிறத்திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேலை தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேறும். முருகப்பெருமான் என்றாலே அவர் குழந்தை பாக்கியத்தை அருளக்கூடியவர் என்று நாம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட குழந்தை வரத்தை தருவதற்கு பாலாடை தீபத்தை முருகப்பெருமானுக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு எவர்சில்வர் பாலாடையை தவிர்ப்பது நல்லது.
அடுத்ததாக பலருக்கும் தெரிந்த வெற்றிலை தீபம் தான். நாம் எதை நினைத்து வெற்றிலை தீபத்தை ஏற்றுகிறோமோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று பலரும் அனுபவப்பூர்வமாக கூறுவது உண்டு. நட்சத்திர கோலம் போட்டு ஆறு வெற்றிலைகளை வைத்து ஆறு நெய் தீபங்கள் அல்லது ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து வேண்டுதலை முன்வைக்க அந்த வேண்டுதல் நிறைவேறும்.
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒரே ஒரு சுத்தம் செய்த செங்கலை வைத்து அதற்கு மேல் ஒரு வெற்றிலையை வைத்து வெற்றிலைக்கு மேல் அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும். இவை எதையுமே என்னால் செய்ய முடியாது இவற்றிற்கு தேவையான பொருட்கள் எதுவும் என்னிடம் இல்லை என்பவர்கள் முழுமனதோடு ஆத்மார்த்தமாக இரண்டே இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து தங்களுடைய கோரிக்கையை கூறினால் முருகப்பெருமான் செவி கொடுத்து தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்.
இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் பிரச்சனையை தீர்க்கும் ஆடி கிருத்திகை
தங்களுடைய வேண்டுதலுக்கு ஏற்ப எந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து தெரிந்து முழுமனதோடு முருகப்பெருமானுக்கு அந்த தீபத்தை ஏற்றி வைக்க தங்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.