பொதுவாகவே வளர்பிறை என்பது நன்கு செழிப்பான நாட்களாக கருதப்படுகிறது. வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு செல்வங்கள் தேயாது வளரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆவணி மாதம் வரக்கூடிய இந்த வளர்பிறை நாட்களில் செவ்வாய் கிழமையில் மகாலட்சுமியை எப்படி வழிபட்டால் செல்வங்கள், பணம் சேரும்? என்ற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆவணி வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய் கிழமை மகாலட்சுமிக்கு ரொம்பவும் விசேஷமான நாளாகும். இந்த நாளில் மகாலட்சுமியை வேண்டி வழிபடுபவர்களுக்கு, மனதில் நினைத்த வேண்டுதல்கள் எப்பேர்பட்டதாக இருந்தாலும், அது பலிக்கும் என்பது நம்பிக்கை. உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல்கள், ஆசைகள், கனவுகள் எதுவாக இருந்தாலும் ஆவணி வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் மகாலட்சுமியை இப்படி வழிபட்டு பிரார்த்தனை செய்யுங்கள், விரைவில் நிறைவேறும்.
ஆவணி வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய் கிழமையில் வீட்டை காலையிலேயே சுத்த பத்தமாக கழுவி வையுங்கள். பூஜை அறையையும் சுத்தம் செய்து பூஜை படங்களையும், விக்கிரகங்களையும் மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அலங்கரித்து வையுங்கள். மகாலட்சுமி படத்திற்கு முன்பாக செம்பு, பித்தளை அல்லது வெள்ளி கலசம் ஒன்றை வையுங்கள். கலசத்தில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை போடுங்கள். அதனுடன் கொஞ்சம் பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றையும் சேருங்கள்.
மகாலட்சுமிக்கு ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து கட்டிய மாலையை போடுங்கள். கிராம்பு, ஏலக்காய் மாலை மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தமானதாகும். இந்த மாலையை போடுவதால் திருமண தடைகள் நீங்கி குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். செல்வ வரத்து அதிகரிக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகள் நீங்குவதற்கு இந்த மாலையை மகாலட்சுமிக்கு அணிவியுங்கள்.
தாமரை மலர் படைத்து மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு வேண்டாம் என்று சொன்னாலும் செல்வங்களும், பணமும் வீடு தேடி வரும். செந்தாமரை மலர் அல்லது வெண் தாமரை மலர் வாங்கி வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு வைத்து பூஜை செய்ய வேண்டும். காயத்ரி மந்திரம் சொல்லி மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வையுங்கள். நைவேத்தியம் படைக்க இனிப்பான பிரசாத பொருட்களை தயார் செய்து வையுங்கள். கற்கண்டு வைக்க நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே:
நினைத்த காரியத்தை நிறைவேற்றும் பரிகாரம்
பின்னர் ஒரு மஞ்சள் துணியில் கொஞ்சம் பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வைத்து, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியான பிரச்சினைகள் தீர வேண்டும், புதிய தொழில் துவங்குவது நல்லபடியாக அமைய வேண்டும், பண வரத்து அதிகரிக்க வேண்டும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வர வேண்டும் என்று நீங்கள் எந்த வகையில் பணத்தை தேடுகிறீர்களோ, அதனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். ஆவணி வளர்பிறை செவ்வாய்க்கிழமையில், மகாலட்சுமியை வேண்டி வழிபட்டு இப்படி முடிந்து வைத்து பிரார்த்தனை செய்தால், நிச்சயம் மகாலட்சுமி அந்த பிரார்த்தனையை உடனடியாக நிறைவேற்றி வைப்பாள் என்பது ஐதீகம். அடுத்த செவ்வாய் கிழமையில் அதை அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று உண்டியலில் போட்டு விடுங்கள்.