கடன் என்றால் அது செவ்வாய் பகவானுக்குரிய செயலாக கருதப்படுகிறது. யாரொருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நீச்சமடைந்து இருக்கிறார்களோ அவர்கள் கடன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீர வேண்டும். செவ்வாய் பகவானை சாந்தமடைய செய்து அவரால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அந்த வகையில் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சினை தீர கடுகு எண்ணெய்
கடனுக்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் தான் செவ்வாய்க்கிழமை செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அதே செவ்வாய்க்கிழமை அன்று நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதோடு துர்க்கை அம்மனையும் வழிபாடு செய்யும்பொழுது அதீத பலன் கிடைக்கும். துர்க்கை அம்மனுக்கு பொதுவாக ராகு காலத்தில் தான் நாம் தீபம் ஏற்றி வழிபாடு செய்வோம். ராகு பகவானாலும் நமக்கு கடன் பிரச்சினை என்பது உண்டாகும் என்பதால் இந்த ஒரு எளிமையான பரிகார வழிபாட்டை செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய ராகு காலத்தில் செய்வது என்பது சிறப்பு.
பொதுவாகவே துர்க்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் ராகு காலத்தில் எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்போம் அல்லவா? அதே முறையில் தான் செவ்வாய்க்கிழமையில் ராகு காலத்தில் அருகில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு சென்று துர்க்கை அம்மனுக்கு இரண்டு அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் இதே ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை தரும். இப்படி தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் கடுகு எண்ணையை பயன்படுத்தி துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தீரும். கடன் பிரச்சினை குறையும்.
ஒன்பதாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு அபிஷேகத்திற்காக பொருட்களை வாங்கித் தருவதோடு குங்கும அர்ச்சனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்தால் நாம் செய்த தீப வழிபாட்டின் முழுமையான பலனை பெற முடியும். இதோடு மட்டுமல்லாமல் செவ்வாய்க்கிழமை அன்று கடுகு எண்ணெயையும் துவரம் பருப்பையும் சேர்த்து ஏதாவது ஒரு உணவு பொருளை தயார் செய்து அதை உண்பதன் மூலமும் செவ்வாய் பகவானின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: மனபாரம் குறைய புரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாள் வழிபாடு
செவ்வாய் பகவானுக்குரிய காரகத்துவம் அதிகமாக இருக்கக்கூடிய கடுகு எண்ணெயை பயன்படுத்தி துர்க்கை அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு விரைவிலேயே செவ்வாய் பகவானால் ஏற்பட்ட கடன் பிரச்சனை தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.