ஒருவர் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், அவருக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க வேண்டும். அனைத்து விதமான செல்வங்கள் கிடைத்தாலும் மன நிம்மதியும் மன சந்தோஷமும் ஒருவருக்கு இருந்தால்தான் அந்த அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். அப்படிப்பட்ட மன நிம்மதியும் சந்தோஷத்தையும் பெறுவதற்கு சந்திர பகவானின் அருள் என்பது முக்கியம். சந்திர பகவானின் அருளை பெறுவதற்குரிய நாளாக தான் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் திகழ்கின்றன. குறிப்பாக பௌர்ணமி தினம் என்பது அதீத சக்தி வாய்ந்த சந்திர பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது.
அதிலும் சந்திர பகவானுக்குரிய திங்கட்கிழமை அன்று இந்த பௌர்ணமி வருவது கூடுதல் சிறப்பை தரும். சந்திர பகவானின் அதிதேவதையாக திகழக் கூடியவர் சிவபெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால்தான் பௌர்ணமி நாளன்று சிவபெருமானுக்குரிய திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் வழக்கத்தை பலரும் வைத்திருப்பார்கள். அப்படி கிரிவலம் செல்வதன் மூலம் பலவிதமான நன்மைகளையும் பெறுவார்கள். பலராலும் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை உண்டாகி இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் தங்கள் ஊரில் இருக்கக்கூடிய சிவ ஆலயத்தில் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது அக்டோபர் மாதம் ஆறாம் தேதி வருகிறது. அன்றைய தினம் காலை 11:43 மணிக்கு பௌர்ணமி திதி ஆரம்பித்து மறுநாள் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி காலை 9 மணி வரை இருக்கிறது. அதனால் பௌர்ணமி வழிபாட்டை செய்ய விரும்புபவர்கள் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி செய்ய வேண்டும். திங்கட்கிழமை ராகு காலை எமகண்ட நேரம் நிறைவடைந்த பிறகு அதாவது மதியம் 1:30 மணிக்கு மேல் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு சிவபெருமானுக்கு முன்பாக நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு சிவபெருமானுக்கும் நந்தி பகவானுக்கும் மலர்களை வாங்கிக் கொடுத்து தங்களின் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
பிறகு சிவாலயத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வலம் வந்து வழிபாடு செய்வதன் மூலம் திருவண்ணாமலை கிரிவலம் செய்த அதற்குரிய பலனை பெற முடியும். மேலும் மாலையில் சந்திரன் முழுமையாக தெரிந்த பிறகு குடும்பத்துடன் சேர்ந்து சந்திர பகவானை வணங்கி “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறி வழிபாடு செய்வதன் மூலம் சந்திர பகவானின் அருளை பரிபூரணமாக பெற முடியும். இதன் மூலம் நாம் மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம்.
இதையும் படிக்கலாமே: நாளை நிறைந்த பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
சிவபெருமானையும் சந்திர பகவானையும் புரட்டாசி பௌர்ணமி தினத்தன்று முழு மனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.