ஹோட்டல் ஸ்டைலில் சின்ன வெங்காய சாம்பார் எப்படி வைப்பது என்று தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அட்டகாசமான சுவையில் மிக மிக சுலபமாக இந்த சாம்பாரை சட்டுனு ரெடி பண்ணிடலாம். உங்களுக்கு சுவையான சாம்பார் வைக்க தெரியாதா. இந்த ஸ்டைலில் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. இந்த சாம்பாரை இட்லி தோசை சாதம் எதற்கு வேண்டுமானாலும் சைட் டிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். ரெசிபியை தெரிஞ்சுக்கலாம் வாங்க.

முதலில் 1/4 கப் அளவு துவரம் பருப்பை எடுத்து தண்ணீரில் கழுவி தயாராக வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தபடியாக குக்கரில் கழுவிய துவரம்பருப்பு, நான்காக வெட்டிய பெரிய தக்காளி பழம் – 1, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 நீளவாக்கில் வெட்டியது, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 1 கொத்து, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, பூண்டு – 4 பல் தோல் உரித்தது, இந்த பொருட்கள் அனைத்தும் குக்கரில் போட்டு அந்தப் பொருட்கள், மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, குக்கரை மூடி போட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.
விசில் வந்து பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு மத்தை வைத்து லேசாக இந்த பருப்பு, வெங்காயம் தக்காளியை மசித்து விடவேண்டும். பருப்பை கொழகொழவென மசித்து விடக்கூடாது. பருப்பு ஆங்காங்கே ஒன்றும் இரண்டுமாக தெரிய வேண்டும். வேக வைத்து கடைந்த பரப்பு அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். வறுத்த வெந்தயம் சீரகத்துடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
இப்போது சாம்பாரை தாளிக்க செல்லலாம். ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், வர மிளகாய் – 1, கறிவேப்பிலை – 1 கொத்து, சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். மொத்தமாக 2 நிமிடம் வதக்கி கொண்டால் வெங்காயம் சரியான பக்குவத்தில் வதங்கி விடும்.

அடுத்தபடியாக பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சாம்பார் பொடி – 2 ஸ்பூன், சேர்த்து கடாயில் உள்ள சின்ன வெங்காயத்தில் ஒரு நிமிடம் வரை வதக்கி, வேக வைத்திருக்கும் பருப்பை கடாயில் சேர்க்க வேண்டும். அடுத்தபடியாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதையும் கடாயில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சாம்பாரை 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் தளதளவென கொதிக்கவிடுங்கள்.

கொதிக்கும் சாம்பாரில் மூடியை திறக்கும்போதே அட்டகாசமான சின்ன வெங்காய சாம்பாரின் வாசம் வீசும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி அடுப்பை அணைத்துவிட்டு பரிமாறினால் ஹோட்டல் ஸ்டைல் சின்ன வெங்காய சாம்பார் தயார். ஒரு முறை இந்த சாம்பாரை உங்களுடைய வீட்டில் வைத்தால் எல்லோருடைய பாராட்டையும் அள்ளிவிடலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.