- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்கோதுமை மாவு இருக்குதா உங்க வீட்டில. அது போதும். இந்த மொறுமொறு முறுக்கை ரொம்ப ரொம்ப...

கோதுமை மாவு இருக்குதா உங்க வீட்டில. அது போதும். இந்த மொறுமொறு முறுக்கை ரொம்ப ரொம்ப ஈஸியா, சூப்பரா செஞ்சிடலாம்.

- Advertisement -

முறுக்கு என்றாலே அதை கஷ்டப்பட்டு தான் செய்ய வேண்டும் என்று யாருமே வீட்டில் முயற்சி செய்து பார்ப்பதே கிடையாது. ஆனால் உங்கள் வீட்டில் இருக்கும் வெறும் கோதுமை மாவை வைத்து மிக மிக சுலபமான முறையில் இந்த சூப்பர் முறுக்கு சுட்டு எடுத்து விடலாம். முறுக்கை எந்த மாவில் செய்தீர்கள் என்று சாப்பிடுபவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு சூப்பரான ரெசிபி இது. மிஸ் பண்ணாமல் தெரிஞ்சுக்கோங்க. மிஸ் பண்ணாமல் ட்ரை பண்ணி பாருங்க.

muruku1

இந்த முறுக்கு மாவு செய்வதற்கு முதலில் 1 கப் அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது 200 கிராம் அளவு கோதுமை மாவு. பச்சையாக இருக்கும் இந்த கோதுமை மாவில் முறுக்கு செய்தால் சரியாக வராது. இதை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைக்கவேண்டும்.

- Advertisement -

எப்பவும் போல இட்லி பானையில் தண்ணீர் வைத்து கொதிக்கவிட்டு, இட்லி பானையில் மேலே இட்லி தட்டை வைத்து, அதன் மேலே ஒரு காட்டன் துணியை விரித்து கோதுமை மாவை காட்டன் துணியில் பரப்பி வைத்து, கோதுமை மாவுக்கு மேலே ஒரு காட்டன் துணியை போட்டு மூடி, இட்லி மூடியை போட்டு 10 நிமிடங்கள் ஆவியில் இந்த மாவை வேக வைக்க வேண்டும். (வெறும் மாவைதான் வேக வைக்கவேண்டும். மாவில் உப்பு தண்ணீர் எதுவுமே கலக்க போவது கிடையாது.)

murukku2

மாவு வெந்தவுடன் இட்லி பானையில் இருந்து இந்த மாவை எடுத்து ஒரு தட்டில் போட்டு நன்றாக ஆற வையுங்கள். வேக வைத்த கோதுமை மாவு கட்டி கட்டியாகதான் இருக்கும். (கட்டி கட்டியாக வந்தால்தான் மாவு வெந்து விட்டதாக அர்த்தம்.) இந்த மாவு கை பொறுக்கும் சூடுக்கு ஆறியவுடன் ஒன்றும் இரண்டுமாக  மாவை உங்கள் கைகளாலேயே உடைத்து விட்டு, இந்த மாவை மிக்ஸி ஜாரில் போட்டு 2 ஓட்டு ஓட்டி விட்டால் போதும். கோதுமை மாவு முறுக்கு செய்ய தயாராகி விடும்.

- Advertisement -

வெந்து தயாராக இருக்கக் கூடிய இந்த மாவை வைத்து தான் முறுக்கு செய்ய வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் வேக வைத்த கோதுமை மாவைப் போட்டுக் கொள்ளுங்கள். கோதுமை மாவுடன் தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை, ஓமம் – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, எண்ணெய் – 2 ஸ்பூன், சேர்த்து முதலில் மாவை நன்றாக பிசைந்து விட வேண்டும். அதன் பின்புதான், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு இதை பக்குவமாக பிசைந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் ஓமம் இல்லை என்றால் கூட, சீரகத்தை நுணுக்கி போட்டுக் கொள்ளலாம். அவ்வளவு தான். முறுக்கு செய்ய மாவு தயார் ஆகிவிட்டது.

murukku1

அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய விட்டு விடுங்கள். நீங்கள் பிசைந்து வைத்திருக்கும் இந்த மாவு பதம் சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் இந்த மாவை பார்க்கும்போது அரிசி மாவை பிசைந்து வைத்தது போலவே நமக்கு தெரியும். வழக்கம்போல இந்த மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து முறுக்கு அச்சில் போட்டு ஸ்டார் அச்சில், ஜல்லி கரண்டியில் முறுக்கிப் பிழிந்து, கடாயில் இருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டியதுதான். சூப்பரான முறுக்கு தயாராகிவிட்டது. எல்லோரும் நிச்சயம் விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க. மிஸ் பண்ணாம ஒருவாட்டி இந்த முறுக்கு ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்