காலையில் ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கிரேவியை சமைத்து வைத்து விட்டால் போதும். தோசை சப்பாத்தி இட்லி இவைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். மதியம் சாதத்திற்கும் இதை சேர்த்து சாப்பிட்டு கொள்ளலாம். வேலை சுலபமாக முடிந்துவிடும். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய கொள்ளு பருப்பை வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் சமையலில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லது. பெரும்பாலும் கொள்ளை வைத்து ரசம் செய்வார்கள். கொள்ளு சுண்டல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கொள்ளு கிரேவி ரெசிபியை இன்னைக்கு நாம பார்ப்போமா.

முதலில் 150 கிராம் அளவு கொள்ளை வாங்கி அதில் இருக்கும் கல்லை சுத்தம் செய்துவிட்டு, தண்ணீரில் போட்டு அலசி ஒரு மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் போட்டு கொள்ளு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 6 விசில் விட்டு கொள்ளை நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த கொள்ளு அப்படியே இருக்கட்டும்.
அடுத்தபடியாக ஒரு நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து புளி கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த புளி தண்ணீரும் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 பல், தோல் உரித்த பூண்டு பல் – 7 சேர்த்து இதை கொரகொரப்பாக அரைத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது கொள்ளு கிரேவியை தாளிக்கலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் – 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, வரமிளகாய் – 2 சேர்த்து நன்றாக வறுத்து விட்டு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் பூண்டு விழுதை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கவேண்டும். வெங்காயத்தின் பச்சை வாடை முழுவதும் நீங்க வேண்டும்.

அடுத்தபடியாக மீடியம் சைசில் இருக்கும் 3 தக்காளி பழங்களை பொடியாக வெட்டி கடாயில் சேர்த்து, 2 சிட்டிகை உப்பு போட்டு தக்காளி வெந்து வரும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். அடுத்தபடியாக மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மல்லித் தூள் – 3 ஸ்பூன், குழந்தைக்கு தேவையான அளவு உப்பு போட்டு 2 வதக்கு வதக்கி கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். புளியின் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கட்டும்.
இதற்குள் வேக வைத்திருக்கும் கொள்ளு பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு வேக வைத்த தண்ணீரை ஊற்றி கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

புளி தண்ணீர் நன்றாக கொதித்து பச்சை வாடை நீங்கிய பின்பு அரைத்த கொள்ளை கடாயில் ஊற்றி, கிரேவிக்கு இந்த இடத்தில் தேவையான அளவு தண்ணீரையும் ஊற்றி, நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடுங்கள். உப்பு காரம் சரி பார்த்து கொள்ளுங்கள். 5 நிமிடம் போல குழம்பு நன்றாக கொதித்து வர வேண்டும். குழம்பின் பச்சை வாடை நீங்கிய பின்பு இறுதியாக கொத்தமல்லி தழை தூவி, அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுடச்சுட சூப்பரான கொள்ளு கிரேவி தயார்.