எப்போதும் இட்லி தோசை என்று இல்லாமல் சில வித்தியாசமான உணவு வகைகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் விருப்பமாக உண்டு மகிழ்வார்கள். அவ்வாறு அவர்கள் பள்ளிக்கு செல்லும் பொழுது இப்படி சற்று வித்தியாசமான உணவு வகைகள் அமைத்துக் கொடுத்தோம் என்றால் அனைத்து குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் பொழுது இவர்கள் மிகவும் பெருமிதத்துடன் சாப்பிட்டு மகிழ்வார்கள். எனவே மரவள்ளிக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய சற்று வித்தியாசமான புட்டு வகையை தான் செய்யப் போகிறோம். இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த நேரம் தான் செலவாகும். செய்ய தேவையான பொருட்களும் சரி, வேலை செய்யும் நேரமும் சரி குறைந்த அளவுதான் தேவைப்படும். இதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:
மரவள்ளி கிழங்கு – அரை கிலோ, வறுத்த பச்சை அரிசி மாவு – ஒரு கப், தேங்காய் – அரைமூடி, நாட்டுச் சர்க்கரை – அரை கப், உப்பு – அரை ஸ்பூன்.
செய்முறை:
முதலில் மரவள்ளிக் கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்த பின்னர் தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து தேங்காய் துருவல் பயன்படுத்தி பொடியாகத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அரை மூடி தேங்காயைத் நன்றாகத் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு துருவிய மரவள்ளிக்கிழங்கை ஒரு கிண்ணத்தில் மாற்றி, அதனுடன் ஒரு கப் வறுத்த பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இந்தக் கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு பல்ஸ் வைத்து லேசாக அரைத்துக் கொள்ளவேண்டும். இப்பொழுது இந்த கலவை ரவை போன்று புட்டு மாவு பதத்திற்கு வந்துவிடும்.
பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அடுப்பின் மீது வைக்க வேண்டும். பின்னர் அதன்மீது ஒரு இட்லி தட்டை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு வெள்ளை நிற துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொள்ள வேண்டும்.

இந்தத் துணியை இட்லி தட்டின் மீது பரப்பி வைத்து, அதன் மீது புட்டு மாவை தூவி விட வேண்டும். பிறகு துணியை சுற்றி மூடிவிட்டு, இட்லி பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பிறகு மூடியைத் திறந்து இட்லி தட்டின் மீது இருக்கும் துணியை வெளியே எடுத்து, நன்றாக வெதுள்ள புட்டை ஒரு தட்டிற்கு மாற்றி உதிர்த்து விட வேண்டும்.

பிறகு அரை கப் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். நாட்டுச்சர்க்கரை விரும்பாதவர்கள் வெள்ளை சர்க்கரை சேர்த்தும் கலந்து கொள்ளலாம். பிறகு இந்த சுவையான மரவள்ளிக்கிழங்கு புட்டை அனைவருக்கும் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். இதன் சுவைக்கு வீட்டில் உள்ள அனைவரும் அடிமையாகிவிடுவார்கள்.