எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான முறையில் ஒரு வெண்டைக்காய் புளி குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடசுட சாதத்திற்கு இந்த வெண்டைக்காய் குழம்பு சூப்பர் சைட்டிஷ். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். வடித்த சாதம் அத்தனையும் பத்தாமல் போகும். இந்த குழம்பை சுடச்சுட இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும். சரி நேரத்தைக் கடத்தாமல் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோமா.
முதலில் 200 கிராம் அளவு வெண்டைக்காயை, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் வெட்டிய வெண்டைக்காய்களை போட்டு, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயில் சுத்தமாக வழுவழுப்புத் தன்மை இல்லாத பக்குவத்தில் வதக்கி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வதக்கிய இந்த வெண்டைக் காய்கள் அப்படியே இருக்கட்டும்.
இப்போது அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோல் உரித்த சின்ன வெங்காயம் 15 பல், தோல் உரித்த பூண்டு – 2 பல், சேர்த்து முதலில் வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், மீடியம் சைஸ் இருக்கும் 2 தக்காளி பழங்களை வெட்டி போட்டு வதக்கவேண்டும். தக்காளிப் பழம் தோல் சுருங்கி வெந்ததும், இறுதியாக மல்லி தூள் – 2 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 1/2 ஸ்பூன் சேர்த்து இந்த மசாலாவை 1 நிமிடம் போல எண்ணெயில் வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள். மிளகாய் தூள் சேர்ந்தவுடன் அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் ஆறியதும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை தண்ணீரில் போட்டு கரைத்து புளிக்கரைசலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்தபடியாக குழம்பை தாளித்த விடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வெந்தயம் – 1/4 ஸ்பூன், கடுகு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், இவைகளை சேர்த்து முதலில் நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை கடாயில் போட்டு விடுங்கள்.
இப்போது வெண்டைக்காயையும் வெங்காயத்தையும் மீண்டும் 2 நிமிடம் போல சுருள சுருள வதக்க வேண்டும். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி விழுதை கடாயில் ஊற்றி, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் சேர்த்து, இந்த விழுதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி விட்டு, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடாயில் ஊற்றி, குழம்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு தளதளவென குழம்பை கொதிக்க வையுங்கள்.
குழம்பு நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு ஒரு மூடி போட்டு 5 நிமிடம் போல வெண்டைக்காயை வேக வைத்தால் போதும். குழம்பு பக்குவமாக தயாராகிவிடும். சுட சுட இந்தக் குழம்பை சாதத்தில் போட்டு சாப்பிட்டு பாருங்கள். அத்தனை ருசியாக இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடித்திருந்தால் ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. சந்தோஷமா வாய்க்கு ருசியா சாப்பிடுங்க. என்ஜாய் பண்ணுங்க.