பொதுவாகவே மெது வடை என்றால் அதை உளுந்து மாவில் தான் நாம் செய்வோம். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, அதன் பின்பு கிரைண்டரில் மாவு ஆட்டி வடை செய்வதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். உளுந்து வடை போலவே, நம்முடைய வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து மொறுமொறுவென ஒரு வடையை செய்ய முடியும். அது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உளுந்து ஊற வைத்து அரைக்க நேரமில்லை. வடை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது இந்த வடையை ட்ரை பண்ணி பாருங்க. டீ குடிக்கும்போது சூப்பரான ஸ்நாக்ஸாக இருக்கும்.
ஒரு அகலமான பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு – 1 கப், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, கருவேப்பிலை பொடியாக நறுக்கியது சிறிதளவு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 2, சீரகம் – 1/2 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சோடா உப்பு – 1/2 ஸ்பூன் இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவை விட கொஞ்சம் தளதளவென பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். (கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி உங்களுடைய விரல்களை வைத்து மாவை சாஃப்டாக பிசைந்து கொள்ளுங்கள்.)
இறுதியாக இந்த மாவின் மேல் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு அப்படியே இரண்டு மணி நேரம் புளிக்க வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து இந்த மாவு லேசாக உப்பிப் பொங்கி வந்திருக்கும்.
இந்த மாவில்தான் வடைசெய்ய வேண்டும். கையில் கொஞ்சமாக தண்ணீரை நனைத்துக் கொண்டு இந்த மாவை ஒரு சிறிய உருண்டையாக எடுத்து உங்களுடைய உள்ளங் கைகளில் வைத்து லேசாக தட்டி, ஒரு ஓட்டை போட்டு அப்படியே மெதுவடை போலவே காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் சிவக்க வைத்து எடுக்க வேண்டும்.
உங்களுக்கு இந்த மாவில் வடை வடிவத்தில் விட முடியவில்லை என்றால், அப்படியே சிறிய சிறிய உருண்டைகளாக கிள்ளி போண்டா போலவே எண்ணெயில் விட்டு பொரித்தெடுத்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். சில பேருக்கு பேக்கிங் சோடா சேர்த்து இந்த வடை செய்ய விருப்பம் இருக்காது. உங்களுடைய வீட்டில் புளித்த இட்லி மாவு இருந்தாலும் பேக்கிங் சோடாவுக்கு பதிலாக இந்த மாவில் போட்டு கலந்து 2 மணி நேரம் ஊற வைத்து பின்பு வடை சுட்டு சாப்பிடலாம் அது நம்முடைய விருப்பம் தான். (ஒரு பெரிய குழி கரண்டி அளவு புளித்த மாவு தேவைப்படும்.)
உங்களுக்கு இந்த வடை ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் நிச்சயமாக விரும்பி சாப்பிடுவார்கள். கோதுமை மாவில் இந்த வடையை செய்வதால் குண்டாகி விடுமோ என்ற கவலை இல்லாமல் இரண்டு வடை சேர்த்து சாப்பிடலாம்.