இப்பொழுது வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. என்ன தான் தண்ணீர் அதிகம் குடித்தாலும் உடலில் உள்ள அனைத்து நீர்சத்தும் உடல் சூட்டிற்கு போதுமானதாக இருப்பதில்லை. எனவே உடலில் நீர் சத்து குறைவதனால் விரைவாக சோர்வாகி விடுவோம். இதனால் வேலை செய்வது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் நாம் உண்ணும் உணவில் நீர் சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை தினமும் ஒன்று என தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி நீர் சத்துக்கள் அதிகமுள்ள முள்ளங்கி, வெள்ளரிக்காய், பூசணிக்காய், புடலங்காய் இது போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லதாகும். அதிலும் இந்த காய்கறிகளுடன் பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வாருங்கள் அப்படி சுவையான பூசணிக்காய் கூட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் – 200 கிராம், துவரம்பருப்பு – 50 கிராம், பச்சைப்பயிறு – 50 கிராம், வேர்க்கடலை – 50 கிராம், தனியா – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், தேங்காய் – அரை மூடி, எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.
செய்முறை:
பச்சை பயிறு மற்றும் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு மறுநாள் இவற்றை குக்கரில் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நூறு கிராம் துவரம் பருப்பையும் குக்கரில் சேர்த்து 4 விசில் வைத்து வேக வைக்க வேண்டும்.
பிறகு வெண் பூசணியை பொடியாக நறுக்கி, அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து விட்டு, தண்ணீர் ஊற்றி, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கடாயை சூடு படுத்தி அதில் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் கடலைப் பருப்பு, தனியா மிளகு மற்றும் தேங்காயைத் துருவி சேர்க்கவும் வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்த மசாலாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தில் வேக வைத்த பூசணிக்காய், மொச்சைப் பயறு, கொண்டைக்கடலை இவற்றை சேர்த்துக் கொண்டு, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்த பருப்பை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இவற்றுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பின் மீது வைத்து, எண்ணெய் சேர்த்து, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டுடன் சேர்த்துக் கலந்து விடவேண்டும். இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்து கொண்டால் சுவையான பூசணிக்காய் கூட்டு தயாராகிவிடும்.