- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வீட்டில் காய்கறி குறைவாக இருக்கின்ற நேரத்தில் இந்தத் தட்டை பயிறு குழம்பு வைத்தால், தனியாக பொரியல்...

வீட்டில் காய்கறி குறைவாக இருக்கின்ற நேரத்தில் இந்தத் தட்டை பயிறு குழம்பு வைத்தால், தனியாக பொரியல் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது

- Advertisement -

மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு குழம்பு, ஒரு பொரியல் அவசியம் இருக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் வீட்டில் காய்கறிகள் குறைவாக இருக்கும், எனவே இருக்கின்ற 2, 3 காய்கறிகளை வைத்து குழம்பு செய்து விட்டால், பொரியலுக்கு என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். ஆகவே இந்த தட்டை பயிறு குழம்பு செய்தால் இதனை சாதத்துடன் சேர்த்து குழம்பாகவும், பொரியலாகவும் சாப்பிட முடியும். இதன் சுவை அவ்வளவு அசத்தலாக இருக்கும். இதனுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது வேண்டுமென்றால் அப்பளம், பருப்பு துவையல் இவை மட்டும் போதும். வாயில் வைத்து உடனே வழுக்கிக் கொண்டு செல்லும் வகையில் அவ்வளவு சுவையாக இந்த குழம்பு இருக்கும். இந்த தட்டைப்பயிறு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதில் சேர்க்கப்படும் சோம்பு, சீரகம், தட்டிய பூண்டு அனைத்தும் வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வாருங்கள் இந்த தட்டை பயிறு குழம்பை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தட்டைப்பயிறு – அரை கப், தக்காளி – 1, வெங்காயம் – 1, கத்தரிக்காய் – 3, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 3 ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பூண்டு – 3 பல், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு வாணலியில் அரை கப் தட்டை பயறை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு குக்கரில் மாற்றிக் கொண்டு, அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனை அடுப்பின் மீது வைத்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, கரைத்து கெட்டியான புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி மற்றும் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதேபோல் மூன்று பல் பூண்டைப் சிறிய உரலில் வைத்து தட்டி வைக்க வேண்டும்

- Advertisement -

தட்டை பயிறு வெந்ததும் குக்கரை திறந்து, அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் சேர்க்க வேண்டும். பிறகு வெட்டி வைத்துள்ள தக்காளி, வெங்காயத்தையும் சேர்த்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் கத்தரிக்காய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு இந்த தாளிப்பை குழம்புடன் சேர்த்து கலந்து விடவேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லிதழை சேர்க்கவேண்டும். அவ்வளவுதான் சுவையான தட்டை பயிறு குழம்பு தயாராகிவிட்டது.

சற்று முன்