உப்புமா என்றால் சேமியா அல்லது ரவை வைத்து செய்யப்படுவது என்று நினைப்போம். ஆனால் உப்புமாவில் விதவிதமான வகைகளும் உண்டு. பெரும்பாலும் இவை யாரும் செய்வது கிடையாது! நொய்யரிசி உப்புமா, அரிசி உப்புமா என்று பல இடங்களில் பரவலாக செய்யப்படும் ஒரு எளிய உணவு வகை ஆகும். உங்களிடம் அரிசி பருப்பு இருந்தால் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள். அவசரத்திற்கு அரிசி உப்புமா டேஸ்ட்டியாக இப்படி கூட செஞ்சு சாப்பிடலாம். அருமையான அரிசி உப்மா எப்படி செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.
அரிசி உப்புமா செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப், துவரம் பருப்பு – ரெண்டு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, கேரட், பீன்ஸ் – ஒரு கப், முந்திரி பருப்பு – 10, சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு ஸ்பூன், துருவிய இஞ்சி – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – 2, தண்ணீர் – மூன்று கப், உப்பு – தேவையான அளவு.
அரிசி உப்புமா செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு அரிசி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப இதன் அளவுகளை கூட்டிக் கொள்ளலாம். நான்கைந்து முறை நன்கு தண்ணீரில் அலசி வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் முழுவதுமாக வடிகட்டியவுடன் ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து நன்கு ஈரப்பதம் போக மொற மொறவென்று வறுத்துக் கொள்ள வேண்டும். சூடு பறக்க நன்கு வறுத்த பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் நீங்கள் தேவையான பொழுது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இவை லேசாக வறுபட்டவுடன் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் துருவிய இஞ்சி, வர மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலையை கிள்ளி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் மற்றும் கேரட்டை சேர்க்கலாம். இது ஆப்ஷனல் தான். நீங்கள் சாதாரண உப்புமாவிற்கு எப்படி செய்வீர்களோ, அதே போல செய்து கொள்ளலாம். அனைத்தும் நன்கு வறுபட்டவுடன் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காய துண்டுகளை சேர்த்து கண்ணாடி பதம் வர நன்கு வதக்கி விடுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசிய வதக்கி விடுங்கள்.
வெங்காயம், தக்காளி நன்கு மசிய வதங்கியதும் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அரிசி பொடிக்கு, 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்ப்பது சரியாக இருக்கும். நீங்கள் எந்த அளவிற்கு சேர்க்கிறீர்களோ, அதே அளவிற்கு மூன்று பங்கு கூடுதலாக தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்து காய்கறிகள் நன்கு வெந்ததும், உப்பை சரி பார்த்து நீங்கள் அரைத்து வைத்துள்ள அரிசி பொடியை ஒரு கப் அளவிற்கு சேர்த்து இடைவிடாமல் கிண்டி வேக வைக்க வேண்டும். மூடி வைத்து ஐந்து நிமிடம் இடை இடையிடையே கிண்டி வைத்தால் சூப்பரான உதிரி உதிரியான அரிசி உப்புமா தயார்! பிறகு ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு ஒரு பிரட்டு பிரட்டி பரிமாறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும்.