நாளை ஆடி கிருத்திகை! கஷ்டங்கள் தீர, முருகப் பெருமானை நினைத்து விரதம் இருந்து, வீட்டிலேயே சுலபமான முறையில் பூஜை செய்வது எப்படி.

murugan-om
- Advertisement -

மாதந்தோறும் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரங்களில் குறிப்பாக இந்த ஆடி மாதம் வரக்கூடிய கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிக மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் சீக்கிரமே தீர்வு கிடைக்க, முருகப்பெருமானை நாளைய தினம் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்கள் நல்ல வரன் அமைய வேண்டுமென்றும், குழந்தை வரம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றும், புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றும், வேலையில் இருப்பவர்கள், இப்போது இருக்கின்ற வேலையை விட இன்னும் நல்ல வேலை கிடைக்க வேண்டும், உயர் பதவிகளும் சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆடிக் கிருத்திகை நன்னாளில் முருகப்பெருமானை நினைத்து வீட்டிலிருந்தபடியே சுலபமான முறையில் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

muruga

எப்போதும்போல இன்று மாலையே உங்களுடைய வீட்டையும் பூஜை அறையையும் முழுமையாக துடைத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நாளை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து தலை ஸ்னானம் செய்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமானின் திருவுருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு புதியதாக பூக்களை சூட்டி, ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு தெரிந்த முருகப்பெருமானின் மந்திரத்தை உச்சரித்து உங்களது விரதத்தை தொடங்க வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் விரதம் இருப்பது என்பது அவர் அவருடைய உடல் சவுகரியத்தை பொறுத்தது. உங்களால் எதுவுமே சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் பருகிவிட்டு விரதம் இருக்க முடியும் என்று நினைத்தால் தாராளமாக முருகப்பெருமானுக்கு உபவாசம் இருக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள், சாப்பிடாமல் விரதம் இருக்க உடல்நிலை ஒத்துவராது என்று நினைப்பவர்கள், மூன்று வேளை சாப்பிட்டும் முருகப் பெருமானை வழிபடலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

Star kolam

காலையில் விரதத்தை தொடங்கி அன்றைய நாள் முழுவதும் நீங்கள் உங்களுடைய வீட்டுவேலைகளை கவனித்தாலும் சரி, அல்லது அலுவலக வேலையை கவனித்தாலும் சரி, வேலை போக மீதமிருக்கும் நேரத்தில் ‘ஓம் முருகா’ அல்லது ‘சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளைய தினம் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் ஆறு மண் அகல் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக நட்சத்திர கோலம் போட்டு ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்களை எழுதி அந்த நட்சத்திர கோலத்தை சுற்றி நீங்கள் ஏற்றிய மண் அகல் தீபத்தை வைத்து, முருகப்பெருமானை வழிபடுவது மிக மிக நல்லது. முருகப் பெருமானுக்கு சுத்தமான பசும் பாலில் நாட்டுச் சர்க்கரை போட்டு நிவேதனமாக வைக்கலாம், அல்லது சர்க்கரைப் பொங்கலை நெய் முந்திரி பருப்பு ஏலக்காய் சேர்த்து மணக்க மணக்க சமைத்து நிவேதனமாக வைக்கலாம்.

அடுத்தபடியாக பூஜையறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் மனமுருகி சொல்லி, முடிந்தால் கந்த சஷ்டி கவசத்தை உங்களது வாயால் உச்சரிக்கவேண்டும். வாய்விட்டு சத்தத்தோடு நாளையதினம் கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் உச்சரித்து முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு பல மடங்கு பலனைத் தரும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.

- Advertisement -

thiruchendur-murugan

கந்த சஷ்டி கவசம் தவிர முருகப்பெருமானின் சிறப்பை போற்றும் வகையில் வேறு ஏதேனும் மந்திரங்கள் பாடல்கள் தெரிந்தாலும் அதை உச்சரித்து முருகப்பெருமானின் மனதை குளிர வைக்கலாம். இறுதியாக எம்பெருமானுக்கு தீப தூப, கற்பூர ஆராதனை காட்டி உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

murugan-1

எதையுமே சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் நாளைய தினம் மாலை 6 மணிக்கு மேல், இறைவனுக்கு நிவேதனமாக வைத்த பிரசாதத்தை முதலில் சாப்பிட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். மனதார நாளை முருகப் பெருமானை வேண்டி இந்த பூஜையை செய்பவர்கள் வேண்டிய வேண்டுதல் கூடிய விரைவில் நிச்சயம் நிறைவேறும் என்பது தான் நம்பிக்கை.

பூஜை புனஸ்காரங்கள் நிவேதனம் இவை எதையுமே அந்த இறைவன் எதிர் பார்ப்பது கிடையாது. இவை அனைத்துமே, நம்முடைய மன திருப்திக்காக, அந்த இறைவனுக்காக நாம் செய்வது தான். இது எல்லாவற்றையும் தாண்டி உண்மையான பக்தியோடு நம்பிக்கையோடு நாளைய தினம் வழிபாட்டை மேற் கொள்பவர்களுக்கு நிச்சயமாக கைமேல் பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம். ‘ஓம் முருகா’ ‘சரவணபவ’.

- Advertisement -