ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

pooja room deepam
- Advertisement -

அனைவரின் இல்லங்களிலும் விளக்கேற்றுவது என்பது முக்கியமான ஒரு செயலாக கருதப்படுகிறது. அவ்வாறு விளக்கேற்றுவது என்பது வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் செய்ய வேண்டும் என்று பலரும் கூறுவார்கள். பெண்களால் செய்ய இயலாத பட்சத்தில் அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஆண்கள் விளக்கு ஏற்றலாம். அவ்வாறு ஆண்கள் விளக்கேற்றும் பொழுது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விதிமுறைகள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் இன்றளவும் வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்கிறார்கள். பெண்களால் விளக்கேற்ற முடியாத சூழ்நிலையிலோ அல்லது பெண்கள் இல்லாத இல்லங்களிலோ எப்படி மகாலட்சுமியின் அருளைப் பெருவது? ஆண்கள்தானே விளக்கேற்ற வேண்டும்.

- Advertisement -

அப்படி ஆண்கள் விளக்கேற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் அதே சமயம் அவர்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுவதற்கும் செய்யக்கூடிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம். முதலில் ஆண்கள் குளிக்காமல் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. குளித்து முடித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் ஈரத் துணியுடன் விளக்கேற்ற கூடாது. தலை ஈரமாக இருக்கும் பொழுது விளக்கேற்ற கூடாது. தலையை நன்றாக துடைத்து காய வைத்த பிறகு தான் விளக்கேற்ற வேண்டும்.

மேலும் மேல் சட்டை அல்லது உள் பனியன் இவற்றை அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வெறும் உடம்பில் தான் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் கைலி அணிந்து கொண்டு விளக்கேற்ற கூடாது. வேஷ்டி அல்லது துண்டு இவற்றில் ஏதாவது ஒன்றை கட்டிக்கொண்டு தான் விளக்கேற்ற வேண்டும். வெறும் நெற்றியுடன் விளக்கேற்றக்கூடாது. நெற்றியில் திருநீறு குங்குமம் வைத்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு நெற்றியில் திருநீறு குங்குமம் வைக்கும் பொழுது தங்களுடைய நெஞ்சுக்குழி பகுதியிலும் திருநீரை வைத்துக்கொண்டு விளக்கேற்றுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். சில இல்லங்களில் பெண்கள் விளக்கேற்றிய தீபத்தை ஆண்கள் குளிர வைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. அதேபோல் ஆண்கள் ஏற்றிய தீபத்தை பெண்கள் குளிர வைக்க கூடாது. ஆண்கள் ஏற்றிய தீபம் அதுவாக குளிர்வது போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஏதாவது மந்திரத்தை உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். மந்திரம் தெரியாதவர்கள் குலதெய்வத்தின் பெயரையோ அல்லது இஷ்ட தெய்வத்தின் பெயரையோ உச்சரித்த வண்ணம் விளக்கேற்ற வேண்டும். யாரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டோ அல்லது எரிச்சலுடனோ விளக்கேற்ற கூடாது. இந்த முறையில் ஆண்கள் விளக்கேற்றும் பொழுது அவர்கள் வேண்டுதல் நிறைவேறும். மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகள் விலக சக்திவாய்ந்த பரிகாரம்

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் இல்லங்களில் விளக்கேற்றும் பொழுது மன மற்றும் உடல் தூய்மையோடு முழு நம்பிக்கையுடன் விளக்கேற்றி வழிபட்டால் கண்டிப்பான முறையில் அவர்களின் வேண்டுதல்களும், வழிபாடுகளும் நிறைவேறும்.

- Advertisement -