கற்றாழை பாயாசம் செய்வது எப்படி

aloevera payasam
- Advertisement -

கற்றாழைக்கு குமரி என்று மற்றொரு பெயரும் இருக்கிறது. இதற்கு காரணம் கற்றாழையை உணவாக எடுத்துக் கொள்பவர்கள் என்றும் இளமையாக இருப்பார்கள் என்பதுதான். பல பொருட்களை வைத்து நாம் பாயாசம் செய்தாலும் மிகவும் சத்து மிகுந்த கற்றாழையை வைத்து பாயாசம் செய்யும் பொழுது கற்றாழையின் நன்மைகளும் நமக்கு கிடைக்கும். அதே போல் வீட்டில் இருக்கும் அனைவரும் அதை சாப்பிடுவார்கள். இளமையை தக்க வைக்க உதவும் கற்றாழையை வைத்து பாயாசம் செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கற்றாழையில் கால்சியம், வைட்டமின், மக்னீசியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. மேலும் கற்றாழையை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும். உடல் குளிர்ச்சி ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக கற்றாழை விளங்குகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கற்றாழை – 2 மடல்
  • பாசிப்பருப்பு – ஒரு டம்ளர்
  • பால் – 2 டம்ளர்
  • துருவிய வெல்லம் – 2 டம்ளர்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு
  • முந்திரி, திராட்சை, பாதாம் – விருப்பத்திற்கு ஏற்றவாறு
  • உப்பு – ஒரு சிட்டிகை அளவு

செய்முறை

முதலில் கனமான மடலாக இரண்டு மடல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோல்களை நீக்கி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சதை பகுதியை எட்டிலிருந்து பத்து முறை நன்றாக சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவ வேண்டும். அந்த சதையின் மேல் இருக்கும் வழவழப்பு தன்மை முற்றிலும் நீங்கும் அளவிற்கு கழுவ வேண்டும்.

கழுவிய இந்த கற்றாழையை முடிந்த அளவிற்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு குக்கரில் பாசிப்பருப்பை சேர்த்து அதை சுத்தம் செய்த பிறகு அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து விட வேண்டும். இரண்டு விசில் வந்த பிறகு அதை திறந்து அதில் பாலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

நன்றாக கொதித்த பிறகு அதில் துருவிய வெல்லத்தை சேர்க்க வேண்டும். வெல்லம் கரைந்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் கற்றாழையை சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீரை ஊற்ற வேண்டும். இவை நன்றாக கொதித்த பிறகு ஏலக்காய் தூள், உப்பு சேர்க்க வேண்டும். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு முந்திரி, திராட்சை, பாதாம் போன்ற பொருட்களை நெய்யில் வறுத்து பாயாசத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுவையான கற்றாழை பாயாசம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ஹோட்டல் ஸ்டைல் பொங்கல் செய்முறை

வெறும் கற்றாழையை நாம் ஜூஸாக செய்து கொடுக்கும் பொழுது வீட்டில் இருக்கும் பலர் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கற்றாழை பாயாசத்தை செய்து தருவதன் மூலம் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -