அமர்நாத் குகை கோவில் அதிசயங்கள்

Siva-lingam

நாம் வழிபடும் சிவன் கோவில்கள் நமது ஊர்களில் பல வருடங்கள் கடந்தும், பல புராணங்களை கடந்தும், பல அதிசயங்களை கொண்டும் இன்னும் அழியாமல் இன்றும் நின்று கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் இந்த கோவில்களை எல்லாம் கடந்து, ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படி அமர்நாத்தில் உள்ள அதிசயம்தான் என்னென்ன?. என்ன ரகசியம் தான் அங்கு மறைந்திருக்கின்றது என்பதைப்பற்றிய வரலாற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Amarnath Pani lingam

அமர்நாத் குகை

அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடம் 51 சக்தி பீடங்களை கொண்டுள்ளது.

சக்தி பீடங்கள் உருவான கதை

சிவபெருமானை மருமகனாக கொண்ட காரணத்தினால் தக்ஷ்ன் சிவனை மதிக்காமல், தன் மருமகனை அழைக்காமல் ஒரு யாகத்தை நடத்தினார். இதற்கு நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயணி யாகம் அழியுமாறு சாபம் கொடுத்து விட்டு, தக்ஷ்ன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என்று தன் தந்தை நடத்திய யாகத்தில் விழுந்து எரிந்து போகின்றாள்.

- Advertisement -

Amarnath Pani lingam

சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவியை இழந்த வருத்தத்தில் தாட்சாயணியின் உடலை கையில் ஏந்திய சிவன் கோரதாண்டவம் ஆடினார். சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தில் தாட்சாயணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி விட்டார். சிதறிய தாட்சாயணியின் உடல் பகுதிகள் 51 சக்தி பீடங்களாக ஆனது. அதில் தாட்சாயினியின் தொண்டை பகுதி விழுந்த இடம் தான் அமர்நாத் குகை கோயில்.

அமர்நாத் குகை நிறுத்தங்கள்

சிவனுக்கு இருக்கும் பல கோவில்களில் அமர்நாத் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த பயணம் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு செல்லும் வரை வழியில் நிறைய நிறுத்தங்கள் உள்ளன. அழிவே இல்லாத சிவபெருமானின் ரகசியங்களை பார்வதி தன்னிடம் கூற வேண்டி வலியுறுத்திய போது, இந்த குகையை நோக்கி பயணிக்க சிவபெருமான் முடிவெடுத்தார். குகைக்கு செல்லும் வழியில் அவர் செய்த சில விஷயங்கள் பக்தர்களுக்கு மிக விசேஷமாக இன்றும் இருக்கின்றது. இதனால் குகைக்கு செல்லும் பாதையில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு புராணக்கதை உள்ளது. புராணப்படி இந்த குகையை அடைய சிவபெருமான் பஹல்காம் பாதையில் பயணித்தார்.

Amarnath

பஹல்காம்

வாழ்வின் இரகசியத்தைப் பற்றி கூற பார்வதியை குகைக்கு அழைத்துச் செல்லும்போது தன் வாகனமான நந்தியைப் புறப்பட்ட இடத்திலேயே சிவபெருமான் விட்டு விட்டார். இந்த இடம் தான் பஹல்காம் என அழைக்கப்படுகிறது. இந்த இடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

சந்தன்பாடி

பஹல்காம்கு அடுத்து வரும் இடம் தான் இந்த சந்தன்பாடி. சந்திரமௌலி என கூறப்படும் சிவபெருமான் தலையில் இருக்கும் நிலவை இங்கு தான் அவர் விட்டு விட்டு சென்றார். சிவன் திரும்பும்வரை அந்த நிலவு அங்கேயே தான் காத்திருக்கின்றது. அதனால் தான் இந்த இடம் சந்தன்வாடி என்று அழைக்கப்படுகிறது.

பிஷூ டாப்

சந்தன் பாடிக்கு சற்று மேலாக தான் இந்த இடம் அமைந்திருக்கின்றது. அமர்நாத் தரிசனத்திற்காக தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அந்த நேரம் சிவபெருமானின் உதவியோடு அசுரர்களை அழித்தார்கள் தேவர்கள். அசுரர்களின் சடலங்களை கொண்டு உருவாகிய இடம்தான் பிஷூ டாப்.

Amarnath

சேஷ்நாக்

பிஷூ டாப்ற்கு அடுத்து வரும் இடம்தான் சேஷ்நாக். சிவபெருமானின் கழுத்தில் உள்ள பாம்பை இங்கு தான் விட்டுச் சென்றார் என்று கூறப்படுகிறது. இங்கு நீல நிறமாக காட்சி தரும் ஏரியே இதற்கு சாட்சி.

மஹாகுநாஷ் மலை

தன் மகனான விநாயகரை சிவபெருமான் இங்கு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இங்கு அழகான அருவிகளும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் நிறைந்து இருக்கிறது. குளிர்காலத்தில் இந்த இடத்தில் குளிர் மிக அதிகமாக இருக்கும்.

பஞ்ச தாரணி

சிவன் தனது பஞ்சபூதமான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு இவைகளை இந்த இடத்தில் தான் விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பஞ்ச தாரணியில் ஐந்து நதிகள் சங்கமம் ஆகின்றன. சிவபெருமானின் கூந்தலிலிருந்து தான் இந்த ஐந்து நதிகளும் பாய்வதாக நம்பப்படுகிறது.

Amarnath

அமர்நாத் குகை

இந்தப் பயணத்தின் கடைசி இடம்தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த குகை. இந்தப் பாதையானது 3 கிலோ மீட்டர் வரை பனியால் சூழப்பட்டிருக்கும். பனியாக உறையப்பட்ட ஆற்றை கடந்தவுடன் அமர்நாத் குகையை அடைந்து விடலாம். 100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டது தான் இந்த குகை. இந்த குகையினுள் தான் பனியால் உருவான சிவனைக் காண முடியும். இந்த குகையில் தான் அமர தத்துவத்தை சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியுள்ளார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த சிவபெருமானை நம் அனைவராலும் தரிசிப்பது என்பது இயலாத ஒன்றாக இருந்தாலும், அந்தக் கோவிலைப் பற்றிய பெருமைகளை நம்மால் அறிந்துகொள்ள முடிந்ததே பெரிய பாக்கியம்.

இதையும் படிக்கலாமே:
திருமணம் விரைவில் நடைபெற, செல்வம் பெருக வீட்டில் துளசி கல்யாணம்

English Overview:
Amarnath temple history in Tamil. Amarnath kovil varalaru Tamil. Amarnath temple details Tamil.