சொர்க்கம், நரகம் பற்றி வேத சாஸ்திரங்கள் எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதைப் பற்றி கவலை கொள்ளாமல் மனிதன் தொடர்ந்து பாவங்களை செய்து கொண்டிருக்கிறான், இதுவே கலியுகம் ஆகும். அதில் ஒரு சிலர் மட்டும் சிறு சிறு தவறுகள் செய்தால் கூட, அய்யய்யோ.. நான் நரகத்திற்கு தான் செல்வேனோ என்று பயப்படுவார்கள். இந்த ஒரு விஷயத்தை செய்தால் நீங்கள் நேராக சொர்க்கம் செல்லலாம் என்று ஆன்மீகம் கூறுகிறது. அதைப் பற்றிய தகவல்களை தொடர்ந்து அறிந்து கொள்வோம் வாருங்கள்.
உலக உயிர்களுக்கு எல்லாம் ஆதாரமாக இருப்பது உணவு! “உணவின்றி உயிர் இல்லை, உயிர் இன்றி உணவில்லை” என்று கூறுவார்கள். உணவு உண்பதால் தான் நாம் உயிரோடு இருக்கிறோம். நாம் உயிரோடு இருப்பதால் தான் உணவும் கிடைக்கிறது. உயிர்களுக்கு உயிரைக் கொடுப்பது உணவு! அது இல்லாவிட்டால் உயிரை எடுப்பதும் அதுவே ஆகும். இத்தகைய அன்னம், இறைவனின் சொரூபமாக இருக்கின்றது.
சிவலிங்கம் நீள் வட்ட வடிவத்தில் இருப்பது போல, அரிசி என்கிற அன்னமும் நீள் வட்ட வடிவத்தில் இருக்கிறது. சிவனின் ஸ்ரூபமாக “அரிசி” கருதப்படுகிறது. இந்த அரிசியால் செய்யப்படும் சாதத்தை கொண்டு அபிஷேகம் செய்யும் பொழுது பெறுவதற்கு அரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம், மகா அன்னாபிஷேகம் சிவனுக்கு வெகு விமரிசையாக சிவ ஆலயங்களில் நடத்தப்படுகின்றது. இதை கண்குளிர தரிசனம் செய்பவர்களுக்கே நேரடி சொர்க்கம் கிடைக்குமாம்.
மகாவிஷ்ணு அலங்கார பிரியர் என்பது போல, சிவன் அபிஷேக பிரியராக இருக்கின்றார். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படும். அதில் மிக முக்கியமான ஒரு பொருள் “சாதம்”. இந்த சாதத்தை கொண்டு அன்னாபிஷேகம் ஆலயங்களில் நடத்தப்படும் பொழுது அதை தரிசிக்கும் பக்தர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது பலனாகும். மரண பயம் இருப்பவர்கள், சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள், மோட்சம் முக்தி அடைய வேண்டும் என்பவர்கள் சிவனுடைய அபிஷேகங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
அன்னத்தினை தயார் செய்து அதில் தீர்த்தம் விட்டு சிவலிங்கம் முழுவதும் மறைக்கும்படி அபிஷேகம் செய்வார்கள். இந்த அன்னாபிஷேகத்தை தரிசிக்க, செய்த வினை எல்லாம் அறுந்து போய், உங்கள் தவறுகளை எல்லாம் உணர செய்து நல்லவர்களாக உங்களை மாற்றக் கூடிய அதிசக்தி வாய்ந்த ஒரு தெய்வீக விஷயமாகும். எனவே மாதம் ஒரு முறையாவது அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவனை அன்னாபிஷேக கோலத்தில் தரிசனம் செய்து வணங்குங்கள்.
இதையும் படிக்கலாமே:
வசீகரம் தரும் பௌர்ணமி மந்திரம்
“உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர்” என்று கூறுவார்கள். அதாவது உணவு தானம் செய்பவர்கள் உயிர் கொடுத்தது போல பெரிதாக போற்றப்படுகிறார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அன்னதானம் செய்பவர்கள் பெரும் புண்ணியத்தை பெறுகிறார்கள். அன்னத்திற்காக பெரும் போரே நடந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இந்த அன்னத்தினை தானம் செய்பவர்களுக்கு, மற்றவர்கள் கொடுக்கும் ஆசிகள் என்றும் வீணானது கிடையாது. கடும் பசிப்பிணியில் வாடும் ஒருவருக்கு நீங்கள் தானம் செய்தால் உங்களுடைய புண்ணிய பலன்கள் இரட்டிப்பாகும் என்பது நியதி. பசியால் வாடும் அவருக்கு உங்களால் உணவு கிடைக்கும் பொழுது, வயிறு நிறைந்து மனதால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசி கொடுப்பார். அந்த ஆசி ஒன்று போதும் நரகத்திற்கு செல்ல மாட்டீர்கள், சொர்க்கத்திற்கு செல்வீர்கள் என்று வேதங்கள் கூறுகிறது.