உடலுக்கு ஆரோக்கியம் தரும் கீரை வடையை இப்படியும் செய்யலாம். ஸ்பெஷலான மொறு மொறு கீரை வடை ரெசிபி உங்களுக்காக.

vadai
- Advertisement -

கொஞ்சம் வித்தியாசமாக ஒரு கீரை வடை ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாக கீரை வடை என்றால் பருப்பு வடையில் தானே செய்வார்கள். ஆனால் உளுந்தம் பருப்பு சேர்த்து ஒரு கீரை வடை ரெசிபி. கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப்போகிறது. உங்க வீட்டில மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. கீரை பிடிக்காத குழந்தைகள் கூட இப்படி வடை செய்து கொடுத்தால் ஆரோக்கியமான இந்த வடையை சாப்பிட்டு விடுவார்கள். சரி நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம்.

முதலில் மீடியம் சைஸில் இருக்கும் 1 டம்ளர் அளவு உளுந்தம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு 2 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று முறை நன்றாகக் கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தண்ணீரில் ஊறிய இந்த பருப்பை நன்றாக தண்ணீரை வடிகட்டி விட்டு, பருப்பை மட்டும் மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த மாவை உங்கள் கையை கொண்டு அல்லது விஸ்க் வைத்தோ 10 நிமிடங்கள் போல அடித்து கலக்க வேண்டும். அப்போது மாவு ப்ளஃபியாக கிடைக்கும். (இப்படி விஸ்க் வைத்து எல்லாம் உங்களுக்கு அடிக்க தெரியாது என்றால், மாவை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த பிரச்சனையும் கிடையாது.)

தயாராக அரைத்து எடுத்து வைத்திருக்கும் மாவில் பொடியாக நறுக்கிய அரைக்கீரை – 1 கட்டு, கருவேப்பிலை – 2 கொத்து பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடியாக நறுக்கியது – 2 இன்ச் அளவு, பெருங்காயத்தூள் – 1/4 கால் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு, மாவுக்கு தேவையான உப்பையும் போட்டு மாவை கலந்து கொண்டால் போதும். வடை சுடுவதற்கு தேவையான மாவு தயார்.

- Advertisement -

அரைக்கீரைக்கு பதிலாக நீங்கள் வேறு கீரையை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். உளுந்தின் அளவை விட கீரையின் அளவு கொஞ்சம் அதிகமாக இருக்கட்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து, வடையை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள்.

பிறகு எப்போதும் போல உங்களுடைய கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மெதுவடை விடுவது போலவே கீரை வடையை எடுத்து, எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை சுட்டு எடுத்தால் சூப்பரான மொறு மொறு கீரை வடை தயார். இந்த ஆரோக்கியமான ரெசிபி உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -