1 கப் ரேஷன் அரிசி இருந்தால் கூட போதும். 10 நிமிடத்தில் சுவை தரும் சுட சுட மொறு மொறு போண்டா தயார்.

bonda_tamil
- Advertisement -

மழைக்காலத்தில் மாலை நேரத்தில் சுட சுட மொறு மொறுன்னு நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் வரும். அந்த நேரம் பார்த்தால் வீட்டில் எதுவுமே இருக்காது. அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, கடலை மாவு என்று எதுவுமே இல்லாத சமயத்தில் கூட 1 கப் அரிசி இருந்தால் இந்த போண்டாவை சுட்டு எடுக்கலாம். கூட இரண்டு உருளைக்கிழங்கும் தேவை. ரேஷன் பச்சரிசி, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி, என்று உங்கள் வீட்டில் இருக்கும் அரிசியை வைத்து இந்த போண்டாவை பக்குவமாக செய்வது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

முதலில் 1 கப் அளவு அரிசியை தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி, நல்ல தண்ணீரை ஊற்றி, 1 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் 2 உருளை கிழங்குகளை எடுத்து குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து, தோல் உரித்து மசித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (250 கிராம் அரிசிக்கு, இரண்டு உருளைக்கிழங்கு சரியாக இருக்கும்.)

- Advertisement -

அடுத்து அரிசி நன்றாக ஊறிய பின்பு, தண்ணீரை வடிகட்டி விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த மாவை கட்டியாக நைசாக விழுது போல அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போடுங்கள். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 1, சில்லி பிளக்ஸ் 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை 2 கொத்து, கொஞ்சமாக கொத்தமல்லி தழை, இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இந்த பொருட்களை எல்லாம் நன்றாக உங்கள் கையை கொண்டு பிசியுங்கள்.

பிசைய பிசைய மாவு தளதளவென உங்களுக்கு கிடைத்துவிடும். போண்டா மாவு பக்குவத்திற்கு இது வந்து விடும். ரொம்பவும் கட்டியாக இருந்தால் 2 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். ரொம்பவும் தளதளவென ஆகிவிட்டது என்றால் கொஞ்சமாக 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். இறுதியாக ஒரு சிட்டிகை ஆப்ப சோடா சேர்த்து உங்கள் கையை கொண்டு நன்றாக அடித்து கலந்து போண்டா பொறிக்க வேண்டியதுதான்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் ஊற்றி சூடானதும் அந்த எண்ணெயில் சிறிய சிறிய உருண்டைகளாக இந்த போண்டா மாவை எடுத்து, எண்ணெயில் விட்டு, மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சூப்பரான போண்டா தயார். இதுக்கு டொமேட்டோ சாஸ் அல்லது தேங்காய் சட்னி, புதினா சட்னி எதைத் தொட்டு சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும். இன்னைக்கு ஈவினிங் ஸ்நாக்ஸுக்கு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: மாவை அரைக்கும்போது கொரகொரப்பாக அரைக்க கூடாது. நைசாகத்தான் அரைக்க வேண்டும். உருளைக்கிழங்கு கட்டி கட்டியாக இருக்கக் கூடாது. நன்றாக மசிந்திருக்க வேண்டும் அப்போதுதான் போண்டா சாப்டாக கிடைக்கும்.

- Advertisement -