ஆரோக்கியமான அரிசி கழுவிய தண்ணீர் ரசம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க செம டேஸ்டாக இருக்கும்!

rice-water-rasam
- Advertisement -

அரிசி கழுவிய தண்ணீரை எப்போதும் வீணாக்க கூடாது. அதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம் என்பதால் அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு பருப்பு வேக வைப்பது, காய்கறிகளை வேக வைப்பது போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் குழம்பிலும் சேர்த்து சமைக்கலாம். அந்த வகையில் அரிசி கழுவிய தண்ணீரில் இதே மாதிரி நீங்களும் ரசம் வச்சி பாருங்க, செம டேஸ்டியாக இருக்கும். ருசியான இந்த அரிசி கழுவிய தண்ணீர் ரசத்தை எப்படி வைப்பது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

அரிசி கழுவிய தண்ணீர் ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், வரமிளகாய் – 4, கருவேப்பிலை – ஒரு கொத்து, இடித்த பூண்டு பல் – ஆறு, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், புளி – எலுமிச்சை பழ அளவு, அரிசி கழுவிய தண்ணீர் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

அரிசி கழுவிய தண்ணீர் ரசம் செய்முறை விளக்கம்:
அரிசி கழுவிய தண்ணீர் தேவையான அளவிற்கு எடுத்து அதில் எலுமிச்சை பழ அளவிற்கு புளியை உருட்டி எடுத்து விதைகள், நார் எல்லாவற்றையும் நீக்கி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் மற்ற தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

புளி நன்கு ஊறிய பிறகு அதை அரிசி கழுவிய தண்ணீரில் கரைத்து கைகளால் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வையுங்கள். இதனுடன் ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஒன்றை நன்கு கைகளால் பிசைந்து சேருங்கள். இதை அப்படியே வைத்துவிட்டு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம், சோம்பு ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து வதக்குங்கள். லேசாக வதக்கி விட்ட பின்பு வர மிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக கிள்ளி சேர்த்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு இடித்து வைத்துள்ள பூண்டு பற்களையும் சேர்த்து வதக்கி விடுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கியதும் மிளகுத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேருங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்து லேசாக இவற்றை வதக்கி விடுங்கள். பின்னர் நீங்கள் வடிகட்டி வைத்துள்ள புளி கலவையில் இருந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள். கொதித்து மசாலா வாசம் எல்லாம் போனதும் மீதம் இருக்கும் எல்லா தண்ணீரையும் சேர்க்க வேண்டும். முதலிலேயே எல்லா தண்ணீரையும் சேர்த்து விட்டால் இவற்றின் பச்சை வாசம் எளிதாக நீங்காது எனவே நாம் சேர்த்துள்ள பொருட்களின் வாசம் கொதித்து அடங்கியதும் மீதம் இருக்கும் புளி தண்ணீரை சேர்க்க வேண்டும்.

எல்லா புளி தண்ணீரையும் சேர்த்த பின்பு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். இப்போது ரசம் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்க வேண்டியது தான். ரொம்பவே சூப்பராக இருக்கக்கூடிய இந்த அரிசி களைந்த தண்ணீரில் செய்த ரசம் அபாரமான சுவையை கொடுக்கும். ஆரோக்கியத்திற்கும் ரொம்பவும் நன்மைகளை செய்யக்கூடிய இந்த ரசத்தை இதே மாதிரி நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க, இனி இப்படித்தான் உங்க வீட்டில் ரசம் வைப்பீங்க!

- Advertisement -