மெது வடை செய்ய இனி மாவு அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரிசி மாவு வைத்து சுவையான மிருதுவான மெதுவடை செய்வது எப்படி?

methu-vadai
- Advertisement -

மழைகாலங்களில் பருவ நிலை மாறுபாட்டினால் திடீரென மழை பெய்ய ஆரம்பிக்கும். அந்த சமயங்களில் சூடாக மொறுமொறுவென்று ஏதேனும் சாப்பிட வேண்டும் போல் தோன்றும். அப்போது வடை செய்வதாக இருந்தால் கடலை பருப்பு அல்லது உளுத்தம்பருப்பை குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வைத்து தான் சமைக்க முடியும். ஆனால் குறைந்த நேரத்தில் நினைத்த உடனே செய்யும் இந்த அரிசி மாவு மெது வடையை எப்படி செய்வது என்பதை பற்றிதான் இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், தயிர் – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிய துண்டு, மிளகு – அரை ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவுடன், அரை கப் தயிர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் உப்பு மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். தோசை மாவை விட கொஞ்சம் தண்ணீராக இருக்குமாறு கரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

arisimavu

அடுப்பைப் பற்ற வைத்து அதன் மீது ஒரு கடாயை வைத்து கடாய் காய்ந்ததும் அடுப்பை சிறிய தீயில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவினை ஊற்ற வேண்டும். மாவினை நன்றாக கிளறவிட்டு, கட்டிகள் விழாமல் இருக்க சிறிது நேரம் கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடங்களில் அரிசி மாவு நன்றாக வெந்து கடாயில் ஒட்டாமல் சுருண்டு வர ஆரம்பிக்கும். அப்பொழுது அடுப்பை அனைத்து கடாயை இறக்கவேண்டும்.

- Advertisement -

மாவினை ஒரு கிண்ணத்தில் மாற்றி கரண்டியை வைத்து நன்றாக பிசைந்து விட வேண்டும். மாவு சற்று ஆறியவுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதனுடன் இஞ்சி, மிளகு, கருவேப்பிலை கொத்தமல்லி இவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

vadai3

அதன்பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மாவினை சிறிய உருண்டைகளாக எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி மாவிற்கு நடுவில் மெது வடையில் செய்வது போன்று சிறிய ஓட்டை போட வேண்டும்.

இவ்வாறு செய்தபின் அவற்றை எண்ணெயில் போட்டு பொறிக்க வேண்டும். வடையின் இரு புறங்களும் நன்றாக சிவந்தவுடன் வெளியே எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய டம்ளர் வேர்கடலை, 5 பச்சைமிளகாய், இரண்டு பல் பூண்டு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்த சட்னியுடன் சாப்பிடும்பொழுது வடையின் மொறுமொறுப்பான சுவை நாவினுள் கரைய ஆரம்பிக்கும்.

methu-vadai1

பின்குறிப்பு: அரிசி மாவினை கடாயில் நன்றாக வேக வைத்து வடை செய்வதால், வடை மிகவும் மிருதுவாக இருக்கும். நினைத்தவுடனே பதினைந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த சூப்பரான வடையை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

- Advertisement -