இட்லி, தோசை மாவு இல்லையா? இன்ஸ்டன்ட் ஆக 10 நிமிடத்தில் பஞ்சு போன்ற இட்லி, தோசை வார்க்க மாவு எப்படி தயாரிப்பது?

soft-idli-maavu
- Advertisement -

இட்லி, தோசை மாவு எப்பொழுதும் எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் ஆனால் சில சமயங்களில் அவசர நேரத்தில் இட்லி, தோசை மாவு கிடைக்காமல் அல்லல்பட வேண்டி இருக்கும். அது போன்ற சமயங்களில் இன்ஸ்டன்ட் ஆக இட்லி, தோசை மாவு தயாரிக்க பொரி இருந்தால் போதும். இந்த அரிசி பொரியை வைத்து எப்படி இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு தயாரிக்கப் போகிறோம்? என்கிற பயனுள்ள சமையல் குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம் வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பொரி தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி பொரி – ரெண்டு கப், ரவை – ஒரு கப், தயிர் – அரை கப், தண்ணீர் – அரை கப், உப்பு – தேவையான அளவு, பேக்கிங் சோடா – அரை ஸ்பூன்.

- Advertisement -

பொரி தோசை மாவு செய்முறை விளக்கம்:
அவசரத்திற்கு தோசை மாவு இல்லாத சமயத்தில் நீங்கள் இரண்டு கப் அளவிற்கு பொரியை எடுத்துக் கொள்ளுங்கள். மொறு மொறுவென்று இருக்கக் கூடிய இந்த அரிசி பொரியை ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பொரி பவுடருடன் ஒரு கப் அளவிற்கு அதே கப்பில் அளந்து ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரவை சேர்த்ததும் மீண்டும் நன்கு நைசாக பவுடர் போல அரைக்க வேண்டும். இவை அரைப்பட்டவுடன் அரை கப் அளவிற்கு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிருடன் அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக மீண்டும் மிக்ஸியை இயக்கி மாவு போல அரைக்க வேண்டும். பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதில் தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு நைசாக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை புளிக்க வைக்க நீங்கள் அரை ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா எனப்படும் சோடா உப்பு சேர்க்க வேண்டும். இதை ஆப்ப சோடா என்றும் கூறுவார்கள். ஆப்ப சோடா இல்லை என்றால் ஈனோ இருந்தாலும் அரை ஸ்பூன் அளவிற்கு நீங்கள் சேர்க்கலாம். இந்த உப்பு கரைய கொஞ்சம் போல ஸ்பூனில் தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மாவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இப்படி ஒரு முறை காலிஃப்ளவர் பேப்பர் ரோஸ்ட் செய்து குடுத்து பாருங்கள், இந்த ரோஸ்ட்க்கு நீங்க வெறும் தயிர் சாதம் தாளித்து வைத்தால் கூட, சத்தம் இல்லாம சாப்ட்டு போய்டுவாங்க.

பின்னர் இன்ஸ்டண்டாக அடுப்பில் எப்பொழுதும் போல நீங்கள் இட்லிக்கு எப்படி அவித்து எடுப்பீர்களோ, அதே போல மாவை ஊற்றி பத்து நிமிடம் நன்கு ஆவியில் அவித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதாங்க, மெத்தன்று பஞ்சு போன்ற வெள்ளை வெளேரென இட்லி சூப்பராக நமக்கு கிடைத்துவிடும். இதில் தோசை வார்த்தாலும் மொறு மொறுவென்று கிரிஸ்பியான தோசை வார்க்க வரும். நீங்களும் இதே முறையில் இன்ஸ்டன்ட் இட்லி அல்லது தோசை செய்து பாருங்கள். இதை பொரி, ரவையை வைத்து தான் செய்தார்கள் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அவ்வளவு சுவையாகவும், டேஸ்ட்டியாகவும் இருக்கும் வித்தியாசமான இந்த ரெசிபியை நீங்களும் அவசர சமயத்தில் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -