தலைமுடி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் நிற்க வேண்டும், தலையில் எந்தவித பொடுகு, கிருமிகள் தொற்று எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும், முடி பிளவுகள் இருக்கக் கூடாது, முடி வறண்டு போகக்கூடாது, முடி பிசுபிசுப்பாக இருக்கக் கூடாது என்று பலவிதமான எண்ணங்களை நாம் கொண்டிருப்போம். இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு இந்த ஒரு ஹேர் பேக் போதும். இந்த ஹேர் பேக்கை எப்படி செய்வது? எப்படி பயன்படுத்துவது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தலையின் மேற்பகுதியில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால் பொடுகு பிரச்சனை என்பது உண்டாகும். இதனால் முடி உதிர்தல் என்பதும் ஏற்படும். அதேபோல் ஒரு சிலருக்கு வறண்ட தலைமுடி இருக்கும் இதன் மூலம் அவர்களுக்கு விரைவிலேயே முடி உதிர்தல் ஏற்படுவதோடு முடிகளில் பிளவுகளும் உண்டாகும். இதன் மூலம் முடி வளர்ச்சியும் தடைப்படும். ஒரு சிலருக்கு எண்ணெய் பசை மிகுந்த தலைமுடியை பெற்றிருப்பார்கள். இதன் மூலம் அவர்களுடைய தலைமுடி பொலிவிழந்து காணப்படும். அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாக்கும். இவை அனைத்தையும் நீக்கி ஆரோக்கியமான அழகான தலைமுடியை பெறுவதற்கு இந்த ஒரு ஹேர் பேக் போதும்.
இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறையோ பயன்படுத்தினால் போதும். தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். இதற்கு இரண்டே இரண்டு பொருட்கள்தான் வேண்டும். இவை இரண்டுமே தலைமுடிக்கு மிகவும் ஆரோக்கியத்தையும் சத்தையும் தரக்கூடியதாக திகழ்வதுதான். அதுதான் தேங்காய் பால் மற்றும் முட்டை. அதுவும் நாட்டுக்கோழி முட்டையாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
நம்முடைய தலைமுடிக்கு ஏற்றார் போல் தேங்காய் பாலை தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரே ஒரு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்படி கலந்த பிறகு நம்முடைய தலைமுடியின் வேர் பகுதியில் இதை எடுத்து தடவி இரண்டு கைகளையும் பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு எப்பொழுது போல் தலைக்கு ஷேம்பு போட்டு குளித்து விடலாம். இந்த முறையில் நாம் செய்வதன் மூலம் நம் தலைமுடிக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கப் பெறுவதோடு தலைமுடி பட்டு போல ஆரோக்கியமாக மிளிர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:முடி அடர்த்தியாக தெரிய டிப்ஸ்
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பொருட்கள்தான் தலைமுடிக்கும் ஆரோக்கியத்தை தரும். அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களையும் நாம் தலைமுடிக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடிக்கு ஆரோக்கியம் ஏற்பட்டு முடி உதிர்தல் முற்றிலும் நின்று நல்ல முடி வளர்ச்சியை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.