பூமிக்கு சொந்தகாரியாக திகழக்கூடியவள் வாராகி அம்மன். உக்கிர தெய்வமாக இருந்தாலும் அன்போடு யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வேண்டிய வரத்தை அருளக்கூடிய அற்புதமான தாயாகவே இவள் திகழ்கிறார். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த வாராகி அம்மனுக்குரிய வளர்பிறை பஞ்சமி நாளில் வழிபாடு செய்ய நம்முடைய வாழ்க்கையில் எதுவெல்லாம் நமக்கு கஷ்டத்தை தருகிறதோ அவை அனைத்தும் நீங்குவதோடு மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அஷ்ட செல்வங்கள் பெருக வழிபாடு
சப்த கன்னிகளில் ஒருவராகவும், உத்திர தெய்வமாகவும், வராக மூர்த்தியின் மறு அவதாரமாகவும் திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பலவிதமான சிறப்பு மிகுந்த நாட்கள் இருந்தாலும் பொதுவாக பலரும் வழிபாடு செய்யக்கூடிய ஒரு நாளாக தான் பஞ்சமி திதி திகழ்கிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக தேய்பிறை பஞ்சமியில் தான் பலரும் வழிபாடு செய்வார்கள். அதோடு சேர்த்து சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் வளர்பிறை பஞ்சமி தினத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் செய்வது கூடுதல் பலனை தரும். முதலில் வீட்டில் இருக்கக் கூடிய வாராஹி அம்மனின் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு சிவப்பு நிற மலர்களை பயன்படுத்தி அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு அகல் விளக்கை எடுத்து அந்த அகல் விளக்கின் வெளிப்புறத்தில் மஞ்சளை நன்றாக தடவி குங்குமத்தை வைத்து ஒரு சிறிய தட்டி மேல் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வாராகி அம்மனுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு சர்க்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து வைக்க வேண்டும். அதேபோல் வெள்ளை மொச்சையை வேகவைத்து அதில் சிறிதளவு தேனை கலந்து வைக்க வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும் நெய்வேத்தியமாக வைத்துவிட்டு பின்வரும் இந்த வாராகி அம்மனின் மந்திரத்தை 51 முறை கூற வேண்டும்.
பிறகு ஸ்ரீ ராமஜெயம் எழுதுவதற்காக நோட்டு வைத்திருப்போம் அல்லவா? அப்படி ஒரு நோட்டை எடுத்து அந்த நோட்டிலும் 51 முறை இதே மந்திரத்தை எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பஞ்சமி திதியிலும் இந்த மந்திரத்தை நாம் 51 முறை தொடர்ச்சியாக எழுத நம் வாழ்வில் பலவிதமான நல்ல காரியங்கள் நடப்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும். இப்படி எழுதி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். கற்பூர ஆராத்தி காட்டும் பொழுது பச்சை கற்பூரத்தை பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
வழிப்பாட்டை நிறைவு செய்த பிறகு ஏற்றிய தீபம் 48 நிமிடங்கள் எரிய வேண்டும். 48 நிமிடங்கள் கழித்து தீபத்தை குளிர வைத்துவிட்டு நெய்வேத்தியமாக வைத்த பிரசாதத்தை எடுக்க வேண்டும். அப்படி எடுத்த இந்த பிரசாதத்தில் சிறிதளவு மட்டும் எடுத்து மணல் பாங்கான இடத்தில் போட்டுவிட்டு மீதம் இருக்கக்கூடிய பொருட்களை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். இப்படி வளர்பிறை பஞ்சமி தினத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய நமக்கு கஷ்டங்களையும் தந்த அனைத்தும் நம்மை விட்டு விலகும். மகிழ்ச்சி நம்மை தேடி வரும்.
மந்திரம்
” ஓம் வம் வாராஹி நம “
இதையும் படிக்கலாமே: கோரிக்கையை நிறைவேற்றும் விநாயகர் மந்திரம்
வளர்பிறை பஞ்சமி தினத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான வளங்களும் அவர்கள் வாழ்க்கையில் வந்து சேரும் கஷ்டம் என்ற பேச்சிற்கே இடம் இல்லாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.