வாரத்தின் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை. அது சூரிய பகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. அதிலும் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் முக்கியமான ஞாயிற்றுக்கிழமையாகவும் சூரிய வழிபாட்டை மேற்கொள்வதற்குரிய சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சூரிய பகவானை வழிபாடு செய்வதற்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஆவணி ஞாயிறு வழிபாடு
ஒருவருடைய ஜாதகத்தில் சூரிய பகவானின் ஆதிக்கம் என்பது சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு எந்தவித நோய் நொடிகளும் இருக்காது. அவருக்கு ஏற்படக்கூடிய வழக்குகளில் வெற்றிகள் உண்டாகும். அரசாங்கம், அரசியல் தொடர்பான செயல்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும் என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சூரிய பகவானின் அருளை பெறுவதற்கு ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பது மிகவும் உறுதுணையாக இருக்கும். அப்படிப்பட்ட ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டிலேயே எளிமையான முறையில் சூரியபகவானை வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டை ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமாவது இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை எந்த ஞாயிற்றுக்கிழமை செய்ய விருப்பப்படுகிறோமோ அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு சூரிய உதயம் ஆவதற்கு முன்பாகவே வீட்டு பூஜை அறையில் 5 அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
அன்று முழுவதும் திட உணவுகளை தவிர்த்து விட்டு திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு தான் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். ஆனால் இந்த வழிபாட்டை சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாகவே செய்துவிட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு சூரிய உதயம் ஆன பிறகு சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு கண்டிப்பான முறையில் கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருள் வேண்டும்.
வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு முன்பாக கோதுமையால் செய்யப்பட்ட நெய்வேத்தியத்தை வைத்துவிட்டு கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து “ஓம் ஆதித்யா நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை சூரிய பகவானை நினைத்தவாறு கூட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். உடல் சூழ்நிலை காரணமாக விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் வழிபாட்டை மட்டும் செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: ஆவணி வளர்பிறை செவ்வாய் வழிபாடு
மிகவும் எளிமையான இந்த ஆவணி ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை முழு மனதோடும் முழு நம்பிக்கையோடும் யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.