வாழைப்பழ கோதுமை மாவு போண்டா குழந்தைகளுக்கு இவ்வளவு பிடிக்குமா? 10 நிமிடத்தில் சுவையான இனிப்பு போண்டா செய்வது எப்படி?

banana-wheat-bonda
- Advertisement -

விதவிதமான போண்டா வகைகளில் இந்த வாழைப்பழம் மற்றும் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படும் போண்டாவிற்கு தனி மவுசு தான். அதிக அளவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சுவையான கோதுமை மாவு போண்டா செய்வதற்கு ரொம்பவே சுலபம் தான். ஆரோக்கியம் தரும் இந்த இனிப்பு போண்டாவை மாலை நேரங்களில் செய்து கொடுத்து, நீங்களும் இதே மாறி அசத்தலாம். சுவையான வாழைப்பழ கோதுமை மாவு போண்டா எப்படி செய்வது?

வாழைப்பழம் கோதுமை மாவு போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் – 2, ஏலக்காய் – 3, சர்க்கரை – அரை கப், பேக்கிங் சோடா – கால் டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கோதுமை மாவு – ஒரு கப், ரவை – கால் கப், துருவிய தேங்காய் – ஒரு கைப்பிடி.

- Advertisement -

வாழைப்பழ கோதுமை மாவு போண்டா செய்முறை விளக்கம்:
முதலில் பெரிய வாழைப்பழம் நல்ல பழுத்த பழமாக இரண்டை எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ரக பழம் வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். நேந்திரம் பழத்தில் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொண்டு அரை கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே ஜாரில் வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த எடுத்த இந்த விழுதை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் நீங்கள் அரைத்து எடுத்த சர்க்கரை பவுடரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். வாசத்திற்கு 3 ஏலக்காயை பொடியாக சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அரைக்கும் பொழுதே ஏலக்காயை சேர்த்து பொடித்தும் கொள்ளலாம். இவற்றுடன் கால் டீஸ்பூன் அளவிற்கு சமையல் சோடா என்னும் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் போண்டா உப்பி வரும். அதே அளவிற்கு உப்பு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்தால் இனிப்பை தூக்கலாக எடுத்துக் கொடுக்கும்.

- Advertisement -

பின்னர் கால் கப் அளவிற்கு ரவையை சேர்த்துக் கொள்ளுங்கள். வறுத்த ரவை, வறுத்த ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. ரவை சேர்க்கும் பொழுது சர்க்கரை கரைந்து போய் மாவு தளர ஆரம்பித்துவிடும். இந்த சமயத்தில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு சேர்த்த பின் மாவு கெட்டி படும். பிறகு போண்டாவிற்கு தேவையான பதத்துக்கு மாவு கலக்க வேண்டும். இதற்கு சிறிது தண்ணீர் தேவைப்பட்டால் தண்ணீரை கொஞ்சமாக தெளித்து கலந்து கொள்ளுங்கள்.

ரொம்பவும் கெட்டியாக இல்லாமல், ரொம்பவும் தளர்வாக இல்லாமல் போண்டா மாவு பதத்திற்கு மீடியமாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். நன்கு 10 நிமிடம் ஊறிய பின்பு துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கலந்து அடுப்பை பற்ற வைத்து எண்ணெயை வாணலியில் கொதிக்க விடுங்கள். எண்ணெய் நன்கு கொதித்ததும், அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள். கோதுமை மாவு வாழைப்பழம் எல்லாம் கெட்டியாக இருக்கும் என்பதால் சிம்மில் வைத்துக் கொண்டே பொறுமையாக பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். கொதிக்கும் எண்ணெயில் சுவையான இனிப்பு போண்டா ஆரோக்கியமான முறையில் தயார்! இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -