பீச் சைட் வேர்க்கடலை மசாலாவை மிகவும் எளிமையாக அதே சுவையில் வீட்டிலேயும் செய்து கொடுக்கலாம். இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

verkadalai
- Advertisement -

குழந்தைகளை சுற்றிப்பார்க்க வெளியில் அழைத்துச் சென்றாலே நமக்குத் தேவையில்லாத செலவுகள் தான் அதிகரிக்கும். அதிலும் குழந்தைகள் அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டால் போதும். அவற்றை வாங்கிக் கொடுக்காமல் இருக்க முடியாது. அவ்வாறு கடற்கரைக்கு சென்றால் அங்கு பலவிதமான உணவு பண்டங்கள் விற்கப்படும். சுண்டல் மசாலா, பஜ்ஜி, மீன் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் விற்கப்படும். அதிலும் நமக்கு அருகில் வந்து இதனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தொந்தரவு செய்வார்கள். அவ்வாறு பீச் என்றாலே அங்கு அதிகமாக விற்கப்படுவது வேர்கடலை மசாலா தான். இந்த வேர்க்கடலை மசாலாவில் மாங்காய் சேர்த்துள்ளதை பார்த்தவுடனே குழந்தைகள் மிகவும் ஆர்வமாக கேட்க ஆரம்பிப்பார்கள். இந்த உணவும் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியது தான். எனவே தவறாமல் நாமும் அதனை வாங்கிக் கொடுக்கலாம். வாருங்கள் இந்த வேர்கடலை மசாலாவை எப்படி வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – கால் கிலோ, வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 1, உப்பு – ஒரு ஸ்பூன், தனி மிளகாய் தூள் – அரை ஸ்பூன், சாட் மசாலா – அரை ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி, சிறிய கேரட் – 1, மாங்காய் சிறியது – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் கால் கிலோ வேர்கடலையை சுத்தமாக கழுவி, அதனை ஒரு குக்கரில் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றுடன் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இதனை அடுப்பின் மீது வைத்து, மூடி போட்டு, குக்கர் விசில் போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

பிறகு எடுத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதனை செய்வதற்கு மிகவும் பக்குவமாக அனைத்தையும் பொடியாக நறுக்க வேண்டும். இல்லை என்றால் குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி விருப்பமாக சாப்பிடமாட்டார்கள்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு சிறிய கேரட்டை காய் துருவலூல் வைத்து பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் மாங்காயையும் அதேபோல் துருவிக் கொள்ளலாம். அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பொடியாக நறுக்கிக் கொள்ளலாம். பிறகு அனைத்தையும் வெட்டி வைத்த பிறகு வேர்க்கடலையை வேக வைத்த குக்கரிலிருந்து விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பிறகு குக்கரை திறந்து தண்ணீரை வடிகட்டி, வேர்கடலையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் துருவி வைத்துள்ள மாங்காய், கேரட் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் சாட் மசாலா, அரை ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான பீச் சைட் மசாலா வேர்க்கடலை வீட்டிலேயே தயாராகிவிட்டது.

- Advertisement -