பீட்ரூட் ரசம்

beetroot rasam
- Advertisement -

நம்முடைய தென்னிந்திய உணவுகளில் மிகவும் முக்கியமானதாகவும், அதே சமயம் மதிய நேர உணவில் இருக்கக்கூடிய குழம்பாகவும், சைவம் அசைவம் என்று அனைத்து விதமான விருந்துகளிலும் இருக்கக்கூடிய ஒன்றுதான் ரசம். இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பீட்ரூட்டை வைத்து எப்படி ரசம் செய்வது என்று பார்ப்போம்.

பீட்ரூட் உடலில் இருக்கக்கூடிய ரத்த அணுக்களை அதிகரிக்க கூடிய தன்மை வாய்ந்தது. மேலும் பீட்ரூட் அல்சரை தடுக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் உடலின் உள்ளுறுப்புகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதற்கும் பீட்ரூட் உதவுகிறது. இதில் அதிக அளவு இரும்புச் சத்தும் விட்டமின் பி1ம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து இருப்பதால் ஜீரண சக்தியை அதிகரித்து பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • மிளகு – 1 1/2 டீஸ்பூன்
  • சீரகம் – 2 டீஸ்பூன்
  • பூண்டு – 20 பல்
  • துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 4
  • தக்காளி – 2
  • புளி – எலுமிச்சம் பழ அளவு
  • மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
  • தேவையான அளவு – உப்பு
  • கடுகு – 1 ஸ்பூன்
  • கருவேப்பிலை – 5 இனுக்கு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் பீட்ரூட்டை எடுத்து தோல் உரித்து சிறிது சிறிதாக நறுக்கி குக்கரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக விட வேண்டும். விசில் போனதும் அதை நன்றாக வசித்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் மிளகு, சீரகம், 15 பல் பூண்டு, துவரம் பருப்பு, 2 காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அறைத்துக் கொள்ள வேண்டும்.

இதில் தக்காளியை கைகளிலேயே பிணைந்தும் வைத்துக் கொள்ளலாம். முடியாதவர்கள் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பீட்ரூட், அரைத்த விழுது, தக்காளி, புளி இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீரும் ஊற்றி கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் மஞ்சள் தூளும், பெருங்காயத்தூளும் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, 2 காய்ந்த மிளகாய், 5 பல் பூண்டை நன்றாக தட்டி போட வேண்டும். ஒரு இனுக்கு கருவேப்பிலையையும் போட்டு கடுகு நன்றாக வெடித்த பிறகு கரைத்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்ற வேண்டும்.

பிறகு அதில் மீதம் இருக்கும் கருவேப்பிலையையும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையையும் சேர்த்து குறைந்த தீயில் மூடி வைத்து விட வேண்டும். ரசம் கொதிக்க கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ரசம் நுரை கூட்டி வரும்பொழுது அதில் சிறிது தண்ணீரை தெளித்து அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். சுவையான அருமையான சத்து மிகுந்த பீட்ரூட் ரசம் தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: குடைமிளகாய் கிரேவி செய்முறை

மழைக்காலத்தில் அதிக சளி இருமல் பிரச்சனை இருப்பவர்கள் எப்போதும் வைக்கும் ரசத்தை விட இந்த பீட்ரூட் ரசித்தை வைப்பதன் மூலம் சளி தொல்லைகள் மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

- Advertisement -