குடைமிளகாய் கிரேவி செய்முறை

capsicum gravy
- Advertisement -

சப்பாத்தி நாண் பரோட்டா போன்றவற்றிற்கெல்லாம் பல வகை சைடு டிஷ்கள் இருந்தாலும் குடைமிளகாய் வைத்து செய்யப்படும் கிரேவி எப்பொழுதும் ஒரு தனி சுவையிலே இருக்கும். இது பலருக்கும் ஒரு விருப்பமான உணவும் கூட, அப்படியான குடைமிளகாய் கிரேவி நான் செய்யும் போது இந்த ஒரு பொருளையும் சேர்த்து செய்தால் ஹோட்டல் சுவையை விட அட்டகாசமாக இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

குடைமிளகாய் – 2,
வெங்காயம் – 2,
தக்காளி – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் -1 டீஸ்பூன்,
தனியா தூள் -1 டீஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு -1/2 டீஸ்பூன்,
கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்,
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்,
கஸ்தூரி மேத்தி – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1/2 ஸ்பூன்,
பட்டை இலவங்கம் தலா – 2.

- Advertisement -

செய்முறை

இந்த கிரேவி செய்ய ஒரு வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மீதமிருக்கும் ஒரு வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் கடல் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பெரிதாக நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் இரண்டையும் சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் நிறம் மாறாமல் பச்சை தன்மை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து விடுங்கள். அதன் பிறகு எண்ணெயில் சீரகம் பட்டை இலவங்கம் அனைத்தும் சேர்த்து பொரிந்த பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதுவும் நிறம் மாறிய பிறகு தக்காளியை சேர்த்து இத்துடன் மஞ்சளும் சேர்த்து குழைய வதக்கி கொள்ளுங்கள். இந்த நேரத்தில் அடுப்பில் இன்னொரு கடை வைத்து கடலை மாவை சேர்த்து லேசாக வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு நிறம் மாறி விடக் கூடாது. ஆகையால் அடுப்பை மிதமான தீயில் வைத்து லேசாக வறுத்து ஆற வைத்து விடுங்கள்.

இப்போது தக்காளி முழுவதுமாக குழைந்த பிறகு மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி விடுங்கள். அதன் பிறகு வறுத்து ஆற வைத்த கடலை மாவு, தயிர் இந்த இரண்டு பொருளையும் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்குங்கள். இந்த இரண்டு பொருளும் தான் கிரேவிக்கு தனி சுவையையும் அதே போல் கிரேவி திக்காகவும் வர உதவி செய்யும்.

இதை நன்றாக வதங்கிய பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். கடலை மாவு சேர்த்து இருப்பதால் கிரேவி திக்காக மாறி விடும். அதற்கு ஏற்றார் போல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு ஏற்கனவே வதக்கி வைத்து வெங்காயம் குடைமிளகாயை இதில் சேர்த்து கஸ்தூரி மேத்தி லேசாக கைகளில் கசக்கி இதில் சேர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் மட்டும் கொதித்தால் போதும். வெங்காயம் குடைமிளகாயில் இந்த கிரேவியில் உள்ள சுவை அனைத்தும் ஊறிய பிறகு எண்ணெய் மேலே பிரிந்ததும் கொத்தமல்லி தழை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். வித்தியாசமான சுவையில் அட்டகாசமான குடைமிளகாய் கிரேவி தயார்.

- Advertisement -