பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? நிலை வாசலில் விளக்கேற்றிய பின்பு தான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டுமா?

Brahma-muhurtham
- Advertisement -

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நீங்கள் மனதில் நினைத்த வேண்டுதல்கள் எதுவாகினும் அது உடனே நிறைவேறும் என்பது தெய்வவாக்காக இருந்து வருகிறது. பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையிலான காலகட்டத்தை குறிக்கிறது. இக்காலகட்டத்தில் பிரபஞ்சத்தின் சக்தி அதீதமானதாக இருக்கும். அது போல விளக்கு ஏற்றும் பொழுது முதலில் வாசல்படியில் ஏற்றி விட்டு பின்பு பூஜை அறையில் ஏற்ற வேண்டுமா? என்கிற சந்தேகமும் பலருக்கும் இருக்கும். இதற்கான விடைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கு ஏற்றும் பொழுது குளித்து இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. சாதரணமாக எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை, கால் போன்றவற்றை கழுவி விட்டு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்றலாம். ஆனால் பெண்கள் மாதவிடாய் கால கட்டங்களில் இது போல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. அது போல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு அருகில் படுத்து இருக்கும் நபர்களும், இல்லறத்தில் ஈடுபட்டு இருப்பவர்களும் கண்டிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிக்காமல் விளக்கை ஏற்றக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆண்கள் விளக்கு ஏற்றலாமா? என்கிற சந்தேகம் இருக்கும். தாராளமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஆண்கள் எழுந்து விளக்கை ஏற்றி வழிபட்டால் நிச்சயம் சிறப்பான பலன்கள் உண்டு. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். நீங்கள் தொழில் செய்யும் இடங்களில் இது போல் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால் இன்னும் அதிக லாபம் பெறலாம். அது போல பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றுபவர்கள் கட்டாயம் வாசல் தெளித்து கோலம் போட்ட பின்பு தான் விளக்கு ஏற்ற வேண்டும்.

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுபவர்கள் முதலில் நிலை வாசலில் விளக்கை ஏற்றி விட்டு பின்பு பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற வேண்டும். முக்கோடி முப்பத்து தேவர்களும், அகிலம் ஆளும் தெய்வங்களும் பிரம்ம முகூர்த்தத்தில் பூமியில் உலா வருவதாக ஐதீகம் உண்டு. எனவே வாசல் தெளித்து கோலம் போட்டு, நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைத்தால் அவர்கள் நம் வீட்டிற்குள் வருவார்கள் என்பது ஐதீகம். அதன் பின்பு பூஜை அறையில் இருக்கும் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விளக்கை ஏற்றி விட்டு பின்பு மறுபடியும் தூங்கலாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழும். தேவர்களும், தெய்வங்களும் உங்களை ஆசீர்வதிக்கும் பொழுது உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நடக்கட்டும் என்று வாழ்த்துவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தால், அப்படியே உங்கள் வாழ்க்கை அமையட்டும் என்று கூறி விடுவார்கள். அனைத்து தேவர்களும், தெய்வங்களும் ஆசீர்வாதம் நமக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. ஆனால் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும் பொழுது இத்தகைய வரம் கிடைக்கிறது என்பதை தொன்று தொட்டு நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தார்கள்.

வாழ்க்கையில் பெரிய இடத்திற்கு சென்ற பல சாதனையாளர்களின் கதையைக் கேட்டால் அவர்கள் அதிகாலையிலேயே எழும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், போகப் போக உங்களுக்கு அதுவே பழகிவிடும். பத்து நாள் இப்படி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வழிபாடு செய்து உங்கள் அன்றாட வேலைகளை செய்து பாருங்கள், நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழும்.

- Advertisement -