டக்குனு 10 நிமிஷத்துல ஏதாவது ஸ்வீட் செய்யணுமா? அப்படின்னா ஆரோக்கியம் தரும் இந்த கோதுமை பாயாசத்தை செய்யுங்க. சூப்பரான டேஸ்ட்ங்க.

wheat-payasam
- Advertisement -

திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டார்கள். அவர்களுக்கு ஸ்வீட் செய்ய வேண்டும் என்றாலும் இந்த ரெசிபி உங்களுக்கு கைகொடுக்கும். அப்படி இல்லையா சுவாமிக்கு நிவேதியும் வைக்க ஏதாவது இனிப்பு பலகாரம் தேவை எனும்போது, இந்த கோதுமை ரவை பாயாசம் உங்களுக்கு உடனடியாக கை கொடுக்கும். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போவது கோதுமை ரவை. ஆனால் இது உப்புமாவுக்கு பயன்படுத்தும் கோதுமை ரவை கிடையாது. Broken wheat என்று கேட்டாலே நமக்கு கடைகளில் கிடைக்கும். அதாவது கோதுமையை சிறிய சிறிய குருணைகளாக உடைத்து விற்பார்கள். உடைத்த கோதுமை என்று சொல்லலாம். அதை வாங்கி இந்த பாயாசத்திற்கு பயன்படுத்துங்கள். ஆரோக்கியம் தரும் இந்த பாயாச ரெசிபி எப்படி செய்வது நேரத்தை கலக்காமல் தெரிந்து கொள்வோமா.

உடைத்த கோதுமை – 100 கிராம் அளந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதே 100 கிராம் அளவு வெல்லம் எடுத்துக் கொள்ளலாம். சரியாக இருக்கும். உங்களுக்கு கூடுதலாக ஸ்வீட் தேவை என்றால், 150 கிராம் வெல்லம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சின்ன டம்ளரில் கூட அளந்து இந்த கோதுமை எடுக்கலாம். எந்த டம்ளரில் கோதுமையை அளக்கிறீர்களோ அதே டம்ளரில் வெல்லத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உடைத்த கோதுமை பாயாசம் செய்முறை:
முதலில் எடுத்து வைத்திருக்கும் கோதுமையை இரண்டு முறை தண்ணீரில் அலசி, தண்ணீரை சுத்தமாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அந்த நெய்யில் கழுவி வைத்திருக்கும் கோதுமை போட்டு, வறுக்க வேண்டும். 2 லிருந்து 3 நிமிடம் மிதமான தீயில் வறுக்கும்போது நல்ல வாசம் வரும். அப்போது அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு வருத்த இந்த கோதுமையில் 3 கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். எந்த கப்பில் கோதுமையை அளந்து எடுத்தீர்கள். அதே கப்பில் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி கலந்து விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குக்கரை மூடி மூன்றிலிருந்து நான்கு விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த கோதுமை விசில் வருவதற்குள் மற்றொரு அடுப்பில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி எடுத்து வைத்திருக்கும் வெல்லத்தை அதில் போட்டு கரைத்து கொள்ள வேண்டும். பாகுபதம் எல்லாம் தேவையில்லை. வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டி இந்த வெல்லத்தை வெந்த கோதுமையில் குக்கரில் ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

இப்போது வெல்லத்தையும் கோதுமையையும் சேர்த்து நன்றாக கொதிக்க வையுங்கள். 3 நிமிடம் வரை கொதிக்க விட்டால், இந்த பாயசம் கொஞ்சம் திக்காக மாறத் தொடங்கும். அப்போது ஏலக்காய் பொடி 1/2 ஸ்பூன் போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பை முழுமையாக தீயை குறைத்து விட வேண்டும். சிம்மில் வைத்து விட்டு 1 பெரிய டம்ளர் அளவு காய்ச்சி ஆற வைத்த பால் எடுத்து இந்த பாயாசத்தில் ஊற்ற வேண்டும். பசும்பால் பாக்கெட் பால் உங்கள் சௌகரியம். உங்கள் வீட்டில் எது இருக்கிறதோ அதை ஊற்றி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். (இந்த இடத்தில் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றினாலும் இன்னும் கொஞ்சம் கூடுதலான சுவை கிடைக்கும்.)

இதையும் படிக்கலாமே: வெஜ் கோலா உருண்டையை இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு தான் பாருங்களேன். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால் கூட, இனி இந்த வெஜ் கோலா உருண்டைக்கு அடிமை தான்.

ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் கொஞ்சம் பொடிசாக வெட்டிய தேங்காய் பருக்களை போட்டு, பொன்னிறம் வரும் வரை சிவக்க வையுங்கள். அதன் பின்பு இதில் முந்திரிப்பருப்பு போட்டு லேசாக சிவக்க விட்டு, உலர் திராட்சை சேர்த்து உடனடியாக இந்த தாளிப்பை அப்படியே பாயாசத்தில் கொட்டி கலந்து சுட சுட சாப்பிட்டால் இது அவ்வளவு அருமையாக இருக்கும். உடலுக்கும் முழுக்க முழுக்க ஆரோக்கியம் தரக்கூடிய பாயாசமும் இது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -