நாவில் எச்சில் ஊறும் கேரட் மைசூர்பாக்கு

carrot mysore pak
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு உணவு பொருட்கள் மிகவும் பிடிக்கும். சுகர் பேசன்டாக இருந்தாலும் இனிப்பை பார்த்ததும் சிறிதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அப்படி சாப்பிடக்கூடிய இனிப்பில் ஆரோக்கியமான ஏதாவது ஒரு பொருளை சேர்த்து செய்தோம் என்றால் அது மிகவும் நன்றாக இருக்கும். அந்த வகையில் கேரட்டை வைத்து மைசூர்பாக்கு செய்யும் முறையை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கேரட்டில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. கேரட்டை தினமும் பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் கிடைக்கும். உடல் நிறமும் மேம்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கேரட்டை வைத்து மைசூர்பாக்கு செய்யும் முறை.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 1 கப்
  • கேரட் – 1/2 கப்
  • ரீபைண்ட் ஆயில் – 3/4 கப்
  • சர்க்கரை – 1 1/2 கப்
  • தண்ணீர் – 3/4 கப்
  • நெய் – 3/4 கப்

செய்முறை

முதலில் கடலை மாவை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடலை மாவை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். மறுபடியும் கடலை மாவை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சலித்து எடுத்த இந்த கடலை மாவில் எண்ணெயை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக கடாயை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரை சேர்க்க வேண்டும். துருவிய கேரட் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸில் அரைத்து சேர்க்க வேண்டும். பிறகு தண்ணீரை ஊற்றி நன்றாக குறைந்த தீயில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்ச வேண்டும். ஒரு கம்பி பதம் வந்த பிறகு நாம் ஏற்கனவே கரைத்து வைத்திருக்கும் கடலை மாவை அதில் சேர்த்து கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் நெய்யை உருக்க வேண்டும்.

- Advertisement -

உருக்கிய நெய்யை சேர்த்தால் தான் அதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அவ்வப்பொழுது ஒரு ஸ்பூன் என்ற விதத்தில் நெய்யை கடலை மாவில் ஊற்றி ஊற்றி கிண்ட வேண்டும். ஊற்றிய நெய் அனைத்தையும் கடலை மாவு ஈர்த்துக் கொள்ளும் வரை அடுப்பில் குறைந்த தீயில் வைத்திருக்க வேண்டும். கடலை மாவு நன்றாக கெட்டியாக வரும்வரை இப்படி செய்ய வேண்டும். அதற்குள் நாம் மைசூர்பாக்கு ஊற்றி வைப்பதற்கு ஒரு தட்டை எடுத்து அந்த தட்டில் நெய்யை நன்றாக தடவி தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

கடலை மாவு கெட்டியானவுடன் அதை அப்படியே அடுப்பில் இருந்து எடுத்து நாம் தயார் செய்து வைத்திருக்கும் தட்டில் ஊற்ற வேண்டும். பிறகு ஒரு ஸ்பூனின் பின்புறத்தில் நெய்யை தடவி அந்த கடலை மாவை நன்றாக அழுத்தி ஒரு லெவலாக தேய்த்து விட வேண்டும். அப்பொழுதுதான் மைசூர்பாக்கு மேலே பார்க்கும் பொழுது சமமாக இருக்கும்.

- Advertisement -

மாவு சூடு ஆறிய பிறகு கத்தியில் சிறிது நெய்யை தடவி நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் நறுக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான கேரட் மைசூர்பாக்கு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: புடலங்காய் தொக்கு செய்யும் முறை

எப்போதும் வழக்கமாக செய்யக்கூடிய இனிப்புகளை தவிர்த்து விட்டு வித்தியாசமான முறையில் ஆரோக்கியமான பொருட்களை இனிப்புடன் சேர்த்து செய்து கொடுக்கலாம்.

- Advertisement -