புடலங்காய் தொக்கு செய்யும் முறை

pudalangai thokku
- Advertisement -

நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மகத்துவமே தனிதான். நாட்டு காய்கறிகளை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர் ரீதியாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாட்டு காய்களில் ஒன்றான புடலங்காயை வைத்து தொக்கு எப்படி செய்வது என்றுதான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

புடலங்காயில் வைட்டமின் ஏ, பி, சி அதிகமாக இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, அயோடின், பொட்டாசியம் போன்றவையும் இருக்கிறது. இதை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல், மூல நோய் போன்றவை நீங்கும். எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • புடலங்காய் – 1
  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/4 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • வெங்காயம் – ஒன்று
  • தக்காளி – ஒன்று
  • கருவேப்பிலை – ஒரு கொத்து
  • பூண்டு – 10 பல்
  • மிளகாய் தூள் – 3/4 ஸ்பூன்
  • மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு அதை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நல்லெண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போன்றவற்றை போட வேண்டும்.

கடுகு வெடித்த பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கருவேப்பிலை இவற்றை போட வேண்டும். பிறகு பூண்டை நன்றாக இடித்துப் போட வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்க வேண்டும். வதங்கிய பிறகு அரைத்து வைத்திருக்கும் புடலங்காயை அதில் சேர்த்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதை புடலங்காயில் சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறி சிறிது எண்ணெய் ஊற்றி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். கடைசியாக அடுப்பில் இருந்து இறக்கும்பொழுது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி இறக்க வேண்டும். மிகவும் சுவையான புடலங்காய் தொக்கு தயாராகிவிட்டது. புடலங்காயில் தான் இந்த தொக்கை செய்தார்களா என்று கேட்கும் அளவிற்கு மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பாலக் பன்னீர் பரோட்டா செய்யும் முறை

பல அற்புதமான சத்துக்கள் நிறைந்த புடலங்காயை கூட்டு, பொரியல் என்று வைப்பதற்கு பதிலாக புடலங்காய் என்று தெரியாத அளவிற்கு ஒரு தொக்கை செய்து கொடுக்கும் பொழுது இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என்று அனைத்திற்கும் இந்த தொக்கை பயன்படுத்தி உண்ணலாம்.

- Advertisement -