சென்னை சைதாப்பேட்டை வடகறி 2 விசிலில் அருமையான சுவையில் குக்கரில் இப்படி செய்யலாமே!

vada-curry1
- Advertisement -

சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வடகறி இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கும். சமையல் தெரியாதவர்கள் கூட சுலபமாக செய்யக் கூடிய வகையில் இருக்கும் இந்த வடகறி நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பாருங்கள். குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் போதும், சூப்பரான சுவையில் சுடச் சுட வடகறி தயாராகிவிடும். அதை எப்படி நாமும் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

vadakari

சைதாபேட்டை வடகறி செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப் பருப்பு – 200 கிராம், சோம்பு – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 2, உப்பு – தேவையான அளவு, சமையல் எண்ணெய் – தேவையான அளவு, கிராம்பு – 4, பட்டை – 2, பிரியாணி இலை – 2, நட்சத்திர சோம்பு – 2, பச்சை மிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 2, இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி – 2, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்.

- Advertisement -

சைதாப்பேட்டை வடகறி செய்முறை விளக்கம்:
கடலைப் பருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி குறைந்தது இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வடகறிக்கு வடை செய்வதற்கு மிக்ஸி ஜார் ஒன்றைக் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள்ஸ்பூன் சோம்பு மற்றும் வர மிளகாய்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஊற வைத்த கடலைப் பருப்பை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

vadakari1

அரைத்த இந்த விழுதினை இட்லி பானையில் வைத்து அவித்தும் எடுக்கலாம் அல்லது எண்ணெயில் போட்டு பொரித்தும் எடுக்கலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் எப்படியோ செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவற்றை ஆற விட்டு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் வைத்துக் கொள்ளுங்கள். குக்கரில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.

- Advertisement -

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் மசாலாப் பொருட்களான கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, நட்சத்திர சோம்பு ஆகியவற்றுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பும் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கி வந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசம் போக வதக்க வேண்டும்.

idli-vadakari

பின்னர் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கி வந்ததும் அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அவைகள் சுருங்க நன்கு வதக்க வேண்டும். பின்னர் மசாலாப் பொருட்களான மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். காஷ்மீரி மிளகாய்த் தூள் நிறத்தைக் கொடுக்கும், இதைத் தவிர்க்க விரும்புபவர்கள் விட்டுவிடலாம்.

vada-curry

பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து உதிர்த்து வைத்துள்ள வடைகளை போட்டு 2 விசில் விட்டு எடுத்தால் போதும், எண்ணெய் மேலே தெளிந்து வடகறி கெட்டியான பதத்திற்கு வந்திருக்கும். பின் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளை தூவி சுட சுட இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்றவற்றுக்கு பரிமாற வேண்டியது தான். ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த வடகறியை இதே முறையில் நீங்களும் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -