ஒரு தக்காளி கூட சேர்க்காம சிக்கன் கிரேவியை இவ்வளவு டேஸ்ட்டா செய்ய முடியுமான்னு நீங்களே ஆச்சரியப்படுற அளவுக்கு சூப்பரான ஒரு சிக்கன் கிரேவி ரெசிபி. இந்த டைமுக்கு ஏத்த சரியான ரெசிபி தான் இது.

chicken gravy chapathi rice
- Advertisement -

இப்போது எல்லோருக்கும் இருக்கும் பெரிய கவலையே இந்த விலைவாசி ஏற்றம் தான். அதிலும் தக்காளி விலையை பற்றி சொன்னால் மயக்கமே வந்து விடும் அளவிற்கு ஏறி இருக்கிறது. எந்த சூழ்நிலை ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை ஆனால் அசைவம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறாது அல்லவா. இது போன்ற சூழ்நிலையில் இந்த ரெசிபி நமக்கு தெரிஞ்சா ஒரு தக்காளி கூட சேர்க்காம சூப்பரான இந்த சிக்கன் கிரேவியை செஞ்சிடலாம். வாங்க எப்படின்னு இந்த சமையல் குறிப்பு பதிவுல தெரிஞ்சுக்கலாம்.

செய்முறை

இந்த கிரேவி செய்ய முதலில் அரை கிலோ சிக்கன் வாங்கி சின்ன சின்னதாக நறுக்கி சுத்தம் செய்து அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, பாதி எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து அரை மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் மூன்று மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஆறு முந்திரி, ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு ரெண்டு ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் தனியா சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நல்ல பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு ஒரு பட்டை, ஒரு லவங்கம், ஒரு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை எல்லாம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஏற்கனவே ஊற வைத்த சிக்கனை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். இப்போது சிக்கனிலிருந்து தண்ணீர் விட்டு ஓரளவுக்கு சிக்கன் நிறம் மாறிய பிறகு நாம் அரைத்து வைத்த மசாலாவை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள் இந்த சமயத்தில் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு இந்த சிக்கனை 10 நிமிடம் வரை வேக விடுங்கள். இடையிடையே மூடியை திறந்து சிக்கனை கலந்து விட வேண்டும். ஒரு வேளை இந்த சிக்கன் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கிரேவியாக வேண்டும் என்றால் கால் டம்பளர் தண்ணீரை ஊற்றி மூடி போட்டு வேக விடுங்கள். பத்து நிமிடம் கழித்து சிக்கன் லிருந்து எண்ணெய் தனியாக பிரிந்து வந்த பிறகு மீண்டும் அரை ஸ்பூன் மிளகுத் தூள் கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவி இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இட்லி, தோசைக்கு தொட்டுக்க தக்காளி வேண்டாம் வெங்காயமும், வேர்கடலையும் வச்சு அருமையான சட்னி ரெசிபி இப்படியும் செய்யலாமே!

இந்த கிரேவி சுடச்சுட சாதத்துடன் வைத்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். அது மட்டும் இன்றி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி வெரைட்டி ரைஸ் என எல்லாவற்றுடனும் சாப்பிட பக்காவான சைடிஷ். ஒரு முறை இப்படி செஞ்சீங்கன்னா எப்பவுமே இப்படித் தான் செய்யணும் நினைப்பீங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -