நம் வீட்டு பக்கத்தில் தள்ளுவண்டி கடை, மெர்ஸ் இப்படிப்பட்ட இடங்களில் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கார சட்னி கிடைக்கும். அதே சுவையில் இன்றைக்கு நாம் ஒரு கார சட்னி ரெசிபியை பார்க்க போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் தக்காளியின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. தக்காளி இல்லாமல் ஒரு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, இந்த சட்னி ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இது சின்ன வெங்காயத்தில் செய்யப் போகும் சட்னி ரெசிபி என்பதால், இதன் ருசியும் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியமும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். வாங்க பதிவிற்குள் சென்று ரெசிபியை பார்க்கலாம்.
செய்முறை
இந்த சட்னிக்கு முதலில் 150 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் பொடியாக நறுக்க வேண்டாம். ஓரளவுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கினால் போதும்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வர மிளகாய் 4 லிருந்து 6, உங்கள் காரத்திற்கு ஏற்ப போட்டு வறுத்து இதை கடாயில் இருந்து எடுத்து விடுங்கள். கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும் அல்லவா. அதில் நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், தோல் உரித்த பூண்டு பல் 4, கருவேப்பிலை 1 கொத்து, சின்ன கோலி குண்டு அளவு புளி, போட்டு வதக்குங்கள்.
வெங்காயம் பாதி அளவு வதங்கி வந்தவுடன் பொட்டுக்கடலை 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் 3 டேபிள்ஸ்பூன், கொஞ்சமாக 1/2 கைப்பிடி கொத்தமல்லி தழை, சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை போக இந்த வதக்கல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக சட்னிக்கு தேவையான அளவு உப்பு, போட்டு இதை நன்றாக ஆர வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு, வறுத்து வைத்திருக்கும் மிளகாய்களையும் இந்த சட்னியோடு சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்தால் சூப்பரான சின்ன வெங்காய கார சட்னி தயார்.
சின்ன வெங்காயம் இல்லாத பட்சத்தில் பெரிய வெங்காயத்திலும் இந்த சட்னியை செய்யலாம். ஆனால் சின்ன வெங்காயத்தில் சட்னி செய்யும்போது சுவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இதற்கு ஒரு சூப்பர் தாளிப்பு கொடுத்து விடுங்கள். நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, வரமிளகாய், தாளித்து சட்னியில் கொட்டி கரைத்து சுடச்சுட இட்லிக்கு மேலே வாத்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவை இருக்கும். இந்த சட்னிக்கு காரம் புளிப்பு கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சூப்பரான மொறு மொறு டீக்கடை கீரை வடை ரெசிபியை இப்படி செஞ்சு பாருங்க. சுவை மிஸ்ஸே ஆகாது.
கொத்தமல்லி தழை வைக்கும்போது சட்னியின் நிறம் பச்சை நிறமாக மாறக்கூடாது. ஆங்காங்கே கொத்தமல்லி தழை தெரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். வாசத்திற்காக கொத்தமல்லி தழை வைக்கவும். அருமையான இந்த கார சட்னி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம சுட சுட இட்லி தோசைக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க.