நம்முடைய ஊர்களில் பணியாரம் எப்படி செய்வோமோ, அதேபோல்தான் கேரளாவில் இந்த சிந்தாமணி அப்பம் மிகவும் பிரபல்யம். ஆனால், இதற்கு நாம் தோசை மாவு, இட்லி மாவு பயன்படுத்தக் கூடாது. தனியாக மாவு அரைக்க வேண்டும். அதற்கான அளவுகளும், சேர்க்கக் கூடிய பருப்பு வகைகளும், என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். பருப்பு வகைகளை சேர்த்து செய்வதால், இது உடலுக்கு ஆரோக்கியம் தர கூடிய உணவும் கூட. இந்த அப்பத்திற்கு தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு கார சட்னி நம்முடைய இஷ்டம் போல செய்து கொள்ளலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபி எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் பச்சரிசி – 1/2 கப், இட்லி அரிசி – 1/2 கப், துவரம்பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், பாசிப்பருப்பு – 1/4 கப் இந்த அளவுகளில் எல்லா பொருட்களையும் போட்டு, மூன்றிலிருந்து நான்கு முறை தண்ணீரை ஊற்றி நன்றாக கழுவிய பிறகு, நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். இந்த பருப்பு வகையும், அரிசியும் சேர்ந்து குறைந்தது 10 மணி நேரமாவது ஊற வேண்டும்.
ஊறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த அரிசி பருப்பை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைக்கணும். நைசாக அரைக்க கூடாது. கொஞ்சம் குருணை குருணையாக ரவை பதத்தில் அரைத்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் திக்கான தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, கலந்து ஒரு மூடி போட்டு 3 மணி நேரம் புளிக்க விட்டு விடுங்கள். மாவு நன்றாக புளித்தால்தான் சாஃப்ட்டாக இந்த அப்பம் கிடைக்கும்.
அடுப்பில் சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றி, கடுகு, உளுந்து, தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் 10 லிருந்து 15 பல், போட்டு பச்சை மிளகாய் – பொடியாக நறுக்கியது காரத்திற்கு ஏற்ப, போட்டு லேசாக வதக்கி விட்டு இதை அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் அப்பம் மாவில் ஊற்ற வேண்டும்.
உங்களுக்கு தேங்காய் எண்ணெய் விருப்பமில்லை என்றால் நல்லெண்ணெயில் கூட இதை தாளித்துக் கொள்ளலாம். வெங்காயம் பிரவுன் கலருக்கு மாறக்கூடாது. கொஞ்சம் லேசாக எண்ணெயில் வதங்கி இருந்தால் போதும்.
இப்படி தாளித்துக் கொட்டிய மாவை நன்றாக கலந்து தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (மாவு ரொம்பவும் கட்டியாக இருந்தால் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளலாம்). பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து ஒவ்வொரு குழியிலும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்த மாவை தேவையான அளவு குழியில் ஊற்றி, மிதமான தீயில் வேகவைத்து திருப்பி விட வேண்டும்.
கோல்டன் கலரில் சிவந்த உடனேயே இந்த அப்பத்தை எடுத்து விட வேண்டும். ரொம்பவும் சிவக்க விட்டால் சாப்பிடுவதற்கு சாஃப்டாக இருக்காது. மிதமான தீயில் உள்ளே மாவு வேகும் வரை பொறுமையாக அப்பத்தை சுட்டு எடுங்கள்.
இதையும் படிக்கலாமே: ஸ்ட்ரீட் ஸ்டைல் முட்டை தோசை செய்முறை
கிட்டத்தட்ட இது நம்ப ஊரு அடை போலத்தான் ருசி இருக்கும். நாம் அடையை தோசை கல்லில் வார்த்து சாப்பிடுவோம். இதை குழி பணியார கல்லில் வார்க்கிறார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். தொட்டுக்கொள்ள வெங்காய கார சட்னி, மிளகாய் சட்னி என்று உங்கள் விருப்பம் போல ஒரு கார சட்னியை பரிமாறி பாருங்கள். அருமையான சுவையில் ஒரு ரெசிபி ரெடி.