தேங்காய் வைக்காமல், தேங்காய் சட்னி அரைப்பது எப்படி?

Thengai Chutney Tamil

நம்முடைய எல்லோரது வீட்டிலும் தேங்காய் வைத்து, பொட்டுக்கடலை வைத்து, பச்சைமிளகாய் வைத்துதான் தேங்காய் சட்னி அரைப்போம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக தேங்காய் வைக்காமல், பொட்டுக்கடலை வைத்து, அதே வெள்ளை நிறத்தில் தேங்காய் சட்னியை போலவே இருக்கக்கூடிய, இந்த புதுவிதமான சட்னி எப்படி அரைப்பது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல இந்த சட்னியை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

Thengai Chutney Tamil

தேங்காய் வைக்காமல் சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (காரம் அதிகம் வேண்டுமென்றால் 2 மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.)
வெங்காயம் 1- பொடியாக நறுக்கியது
பொட்டுக்கடலை – 5 லிருந்து 6 டேபிள்ஸ்பூன் அளவு, தேவையான அளவு உப்பு, உரித்த பூண்டு பல் – 4, ஒரு சின்னதுண்டு அளவு புளி.

ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, முதலில் பச்சை மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்பு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். வெங்காயம் சிவப்பு நிறமாக மாறும் அளவிற்கு வதக்க வேண்டாம். வெங்காயத்தின் பச்சை வாடை போகும் அளவிற்கு வதக்கினால் போதும். இறுதியாக கடாயில் 4 துண்டு பூண்டை சேர்த்து விட்டு, அடுப்பை அணைத்து விடவும்.

Thengai Chutney Tamil

இந்த வதக்கல், நன்றாக ஆறிய பின்பு, மிக்ஸி ஜாருக்கு மாற்றிக் கொண்டு, இதோடு, பொட்டுக்கடலை சேர்த்து, ஒரு துண்டு புளி வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, அரைத்துக் கொள்ள வேண்டும். மொழு மொழு என்று அரைக்க வேண்டாம். கொஞ்சம் நறநற பதத்தில் அரைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

Thengai Chutney Tamil

இந்தச் சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு, சிறிய தாளிப்பு போட வேண்டும். கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய், போட்டு தாளித்து இதில் கொட்டி விட்டீர்கள் என்றால் தேங்காய் இல்லாத, தேங்காய் சட்னி சுவையான முறையில் தயார். ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள்.

Thengai Chutney Tamil

உங்கள் வீட்டில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சேர்த்த சட்னி அரைபர்களாக இருந்தால், அந்த சட்னியின் சுவையை மேலும் கூட்டுவதற்கு, ஒரு சின்ன டிப்ஸ் உள்ளது. மிக்ஸியில் தேங்காய் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து, அதில் 3 சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை, 4 பூண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி சேர்த்து அரைத்து, அந்த சட்னியை தாளித்து சாப்பிட்டீர்கள் என்றால் அதன் சுவை இன்னும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.