கோதுமை மாவு கப் கேக் | Wheat Flour cupcake recipe
ஓவன் எதுவும் இல்லாமல் மினி கப் கேக் சூப்பராக நம் வீட்டிலேயே தயார் செய்ய முடியும். ஒரு கப் கோதுமை மாவு இருந்தாலே போதும், சட்டுன்னு பேசிக் கொண்டே கப் கேக் செய்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் இந்த சாஃப்ட் பஞ்சு போன்ற சாதாரண கப் கேக் பேக்கரியில் இனி வாங்க தேவையில்லை! நாமே தயாரிக்கலாம். குக்கர் கப் கேக் ரெசிபி எப்படி ஈசியாக செய்வது? என்று இனி தெரிந்து கொள்வோம் வாங்க.
தேவையான பொருட்கள்
சர்க்கரை – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், பட்டை – ஒரு துண்டு, ஏலக்காய் – 3, நெய் – ரெண்டு ஸ்பூன், ஆப்ப சோடா – கால் ஸ்பூன், காய்ச்சின பால் – முக்கால் கப், நட்ஸ் – கால் கப், ப்ளேவர் எசென்ஸ் – தேவைக்கு ஏற்ப.
செய்யும் முறை
இந்த கப் கேக் செய்வதற்கு முதலில் ஒரு குக்கரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் உள்ளே ஸ்டாண்ட் போல ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது தான் டம்ளர்களை அடுக்கி வைக்க வேண்டும். அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்து விட்டு மற்ற வேலைகளை செய்யுங்கள். குக்கர் கொஞ்சம் சூடு ஆக வேண்டும்.
இப்போது ரெண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை மட்டும் எடுத்து ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதை கடைசியில் கேரமலைஸ் செய்ய வேண்டும். அதாவது கேக் நல்ல நிறம் கொடுக்க கரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதே அளவிற்கு சர்க்கரையை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஒரு சிறிய துண்டு பட்டை, மூணு ஏலக்காய் போட்டு நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது இந்த அரைத்த சர்க்கரை பவுடரை கோதுமை மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் ஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா எனப்படும் ஆப்ப சோடா கலந்து கொள்ளுங்கள். அப்போதுதான் கேக் உப்பி வரும். பிறகு இதனுடன் ரெண்டு ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள். நெய் அல்லது சாதாரண ரீபைன்ட் ஆயில் கூட சேர்க்கலாம். நன்கு கட்டிகள் தட்டாமல் கைகளால் கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.
கேக் நல்ல ஃப்ளேவர் கொடுக்க உங்களிடம் இருக்கும் வெண்ணிலா எசன்ஸ், ரோஸ் பெரி எசென்ஸ், ஸ்ட்ராபெர்ரி என்று எந்த எஸ்சன்ஸ் இருந்தாலும் அதை நீங்கள் தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதனுடன் நன்கு காய்ச்சி ஆற வைத்த பால் முக்கால் கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு தாளிப்பு கரண்டியில் இருக்கும் சர்க்கரையை சூடாக்கி நுரைக்க கரைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை இளக ஆரம்பித்தால் நல்ல பிரவுன் நிறம் கொடுக்கும். நுரை பொங்கிய உடன் அடுப்பை அணைத்து அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது எல்லாவற்றையும் நன்கு கலந்து தோசை மாவு பதத்திற்கு கெட்டியாக வர வேண்டும்.
பிறகு நீங்கள் விருப்பப்பட்ட நட்ஸ் வகைகள் கேட்கின் மீது தூவக்கூடிய எந்த பொருட்களையும் உங்கள் விருப்பம் போல சேர்க்கலாம். எல்லாவற்றையும் கலந்து வைத்த பின்பு பெரிய டம்ளர்களில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெயை உட்புறம் தடவிக் கொள்ளுங்கள். கேக் ஒட்டாமல் வருவதற்கு கொஞ்சம் கோதுமை மாவை தூவி கவிழ்த்தி விடுங்கள். பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள கேக் மாவை இதில் பாதி அளவிற்கு ஊற்றி நிரப்ப வேண்டும். மேலே அலங்கரிக்க நட்ஸ் வகைகளை சேர்க்கலாம். எல்லா டம்ளர்களிலும் இதுபோல செய்து வைத்துவிட்டு, குக்கரில் இருக்கும் தட்டின் மீது ஒவ்வொரு டம்ளரையும் அடுக்கி வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
இப்படி மட்டும் சுட்டுக் கொடுத்தா கோதுமை தோசையை இனிமே யார்தான் வேண்டாம்ன்னு சொல்வாங்க? கோதுமை தோசை பிடிக்காதவர்களுக்கு கூட ஃபேவரட் தோசை ஆகிவிடுமே!
பிறகு குக்கரை மூடி விசில் எதுவும் போடக்கூடாது அப்படியே விட்டுவிட வேண்டும். 20 நிமிடம் சூட்டிலேயே நன்கு வெந்து வந்திருக்கும். 20 நிமிடம் கழித்து வாசம் வர ஆரம்பிக்கும், அந்த சமயத்தில் அடுப்பை அணைத்துவிட்டு குக்கரை திறந்து ஒவ்வொரு டம்ளராக இடுக்கியை பிடித்து எடுத்து கீழே வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் ஆறியவுடன் பின்புறம் லேசாக தட்டினால் அழகாக வந்து விழும். அவ்வளவுதாங்க ரொம்பவே சாப்ட்டான பஞ்சு போல இருக்கக் கூடிய இந்த கப் கேக் ஓவன் இல்லாமல் ஈசியாக தயார் செய்து விடலாம், நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.