ராகி தோசை இப்படி சுட்டால் நீண்ட நேரத்திற்கு மொறுமொறுவென சூப்பராக இருக்கும். குழந்தைகள் எல்லோரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

dosai
- Advertisement -

நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேழ்வரகை உணவோடு அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ இப்படி ராகி தோசையை குழந்தைகளுக்கும் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் சுட்டுக் கொடுப்பது மிகவும் நல்லது. ராகி தோசை செய்தால் சில பேருக்கு மொறு மொறுவென வராது. அதே சமயம் சுட்ட உடனேயே தோசை கொல கொலவென மாறிவிடும். அதாவது தண்ணீர் விட்டது போல மாறிவிடும். மொறுமொறுவென சுவையாக ஆரோக்கியமாக ராகி தோசை சுடுவது எப்படி என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு அகலமான கிண்ணத்தில் ராகி மாவு – 1 கப், அரிசி மாவு – 1/2 கப், ரவை – 1/2 கப், இந்த மூன்று பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின்பு 4 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, மாவை கட்டிகள் இல்லாமல் கரைந்து அப்படியே மூடி போட்டு வைத்து விடுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். எந்த கப்பில் ராகிமாவை அளந்தீர்களோ அதே கப்பில் அரிசி மாவு, ரவை, தண்ணீரை அளக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் துருவிய மீடியம் சைஸில் இருக்கும் கேரட் – 1, கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது – சிறிதளவு, உப்பு – 2 சிட்டிகை, சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்கி இதை அப்படியே தயார் செய்து வைத்திருக்கும் மாவில் கொட்டி நன்றாக கலந்து விடுங்கள். இந்த மாவு ரவை தோசை மாவு போல நீர்க்க இருக்க வேண்டும். அந்த அளவிற்கு தண்ணீராக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் தண்ணீர் கூட சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மாவு தயார்.

- Advertisement -

அடுப்பில் தோசை கல்லை வைத்து தோசைக்கல் நன்றாக காய்ந்ததும் அதில் எண்ணெய் தடவி தயாராக இருக்கும் மாவை ஒரு கரண்டியால் எடுத்து அப்படியே பரவலாக ஊற்ற வேண்டும். மாவு ஓட்டை ஓட்டையாக வரும் அப்படியே இருக்கட்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு தோசையை நன்றாக சிவக்க வைத்து அதன் பின்பு திருப்பி போட்டு பாருங்கள். (ரவா தோசை ஊற்றுவது போல தான் இந்த தோசையையும் ஊற்ற வேண்டும்.)

தோசை மொறு மொறுவென சூப்பராக கிடைக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள கூட எதுவுமே வேண்டாம். குழந்தைகளுக்கு ஈவினிங் டைமில் இதை சுட்டுக் கொடுத்தால் வெறுமனே இரண்டு தோசை கூட சாப்பிட்டு கொள்வார்கள். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ஒருவாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -