சுவையான தயிர்சாதம் சரியான பதத்தில் சரியான அளவில் ஒருமுறை இவ்வாறு செய்து பாருங்கள்

curd-rice
- Advertisement -

பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி தயிர்சாதம் செய்கின்றனர். ஆனால் அவற்றை எவ்வாறு முறையாக செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. ஒரு சில வீடுகளில் மிகவும் கெட்டியாக செய்துவிடுவார்கள். ஒரு சிலர் தண்ணீர் போல் நீர்த்து இருக்குமாறு செய்து விடுவார்கள். தயிர்சாதம் செய்வதற்கென்று முறையான பதம் இருக்கிறது. சாதம் வடிக்கும் பொழுதே இதற்கான பதத்தை கையாள வேண்டும். தயிர் சாதத்தை எவ்வாறு சுவையாக சரியான பதத்தில் செய்ய கூடிய இரண்டு முறைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

curd-rice

தயிர் சாதம் செய்முறை 1:
அரிசி – அரை டம்ளர், தண்ணீர் – மூன்று டம்ளர், தயிர் – மூன்று ஸ்பூன், வெண்ணை – ஒரு ஸ்பூன், பால் – 1 1/2 டம்ளர், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். சாதம் நன்றாக குழைந்து வருமாறு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த சாதத்துடன் 3 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் வெண்ணை, ஒன்றரை டம்ளர் காய்ச்சிய பால் கால், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இப்பொழுது அளவான பதத்தில் தளதளவென்று தயிர்சாதம் சரியான சுவையுடன் இருக்கும். இதனை சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக இருக்கும். (இப்படி தயிர் சாதம் செய்து, சாதத்தை லஞ்ச் பாக்சில் கட்டிக் கொடுத்தாலும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து சாப்பிட்டாலும், தயிர் புளிக்காமல் அப்படியே இருக்கும்.)

butter-vennai

தயிர் சாதம் செய்முறை 2:
தயிர் – ஒரு கப், வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை ஸ்பூன். மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு டம்ளர் அரிசியை நன்றாக சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு கப் தயிரை கட்டிகளில்லாமல் கரைத்துக் கொண்டு, தாளித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

oinion

அதன்பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து, அதனுடன் கலந்து வைத்துள்ள தயிரை ஊற்றி நன்றாக கலந்துவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி ஒரு முறை கலந்து விட்டால் போதும் சுவையான தயிர்சாதம் தயாராகிவிடும். இப்படி தயிர்சாதம் செய்தால், தயிர்சாதம் செய்த ஒரு சில நிமிடங்களிலேயே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனென்றால் பால் சேர்க்காமல் தயிர் மட்டும் சேர்த்து செய்திருக்கக் கூடிய இந்த சாதம், சீக்கிரமே புளித்துப் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -