தீபாவளி திருநாள் அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டிருப்போம். வட மாநிலத்தவர்கள் குபேர லட்சுமி பூஜையை செய்து லட்சுமி மற்றும் குபேர பகவானின் அருளை பெறுவார்கள். அன்றைய தினத்தில் நாம் முன்னோர்களையும் வழிபாடு செய்வோம். இது தவிர்த்து நாம் செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான ஒரு வழிபாடு குலதெய்வ வழிபாடு. தீபாவளி அன்று குலதெய்வ வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தீபாவளி அன்று செய்ய வேண்டிய குலதெய்வ வழிபாடு
பொதுவாகவே எந்த ஒரு நன்மைகள் ஒருவருக்கு நடக்க வேண்டும் என்றால் அதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும் என்று கூறுவார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்த குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கும் குலதெய்வத்தால் ஏற்பட்ட சாபம் நீங்கவும் குலதெய்வத்திற்கு நம்மீது ஏதாவது கோபம் இருந்தால் அந்த கோபம் தனியவும் தீபாவளி திருநாள் அன்று குலதெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
இந்த குலதெய்வ வழிபாட்டை தீபாவளி அன்று மாலை 4:30 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். குலதெய்வத்தின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக தலைவாழை இலையை விரிக்க வேண்டும். பிறகு குலதெய்வத்திற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வோமோ அந்த பொருட்கள் அனைத்தையும் படையலாக போட வேண்டும். அசைவ படையல் போடுவதாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மையப் பகுதியான ஹாலில் இந்த படையலை போடலாம். சைவப் படைகளாக இருக்கும் பட்சத்தில் பூஜை அறையிலேயே போட்டுக் கொள்ளலாம்.
இந்த படியலுக்கு அருகில் ஒரு சுத்தமான சொம்பை எடுத்து அது நிறைய எச்சில் படாத தண்ணீரை பிடித்து வைக்க வேண்டும். பிறகு அதில் மூன்று ஏலக்காய் ஒரு நல்ல சுத்தமான புள்ளிகள் இல்லாத எலுமிச்சம் பழம் இவற்றை போட வேண்டும். பிறகு குலதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். பிறகு நம்முடைய குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும். உதாரணமாக மாரியம்மன் தான் குலதெய்வம் என்று இருந்தால் ஓம் மாரியம்மன் போற்றி என்று 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்து முடித்த பிறகு நாம் எடுத்து வைத்திருக்கும் சொம்பு தண்ணீரை எடுத்து கற்பூர ஆரத்தி காட்டுவது போல் அந்த படையலுக்கு மூன்று முறை காட்ட வேண்டும். பிறகு நம்முடைய வீட்டு தலைவாசலுக்கு வெளியே வந்து அந்த தலைவாசலையும் மூன்று முறை சொம்பை வைத்து சுற்ற வேண்டும். பிறகு இதை அப்படியே பூஜை அறையில் கொண்டு போய் வைத்து விடுங்கள். படையல் போட்ட பொருட்களை வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். நாம் ஏற்றி வைத்த தீபம் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும்.
தீபம் எரிந்து முடித்த பிறகு சொம்பில் இருக்கக் கூடிய தண்ணீரை எடுத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். மேலும் வீட்டில் இருக்கக்கூடிய குடும்ப நபர்களின் தலையிலும் தெளிக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழம் மற்றும் ஏலக்காயை அப்படியே எடுத்து பூஜையில் வைத்து விடுங்கள். அன்று இரவு முழுவதும் அது அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இந்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி சாறு பிழிந்து அதில் சிறிதளவு தண்ணீரை கலந்து வீட்டில் இருக்கும் அனைவரும் பருக வேண்டும். ஏலக்காயை சமையலுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:கண் திருஷ்டி போக்கும் செடிகள்
இந்த முறையில் குலதெய்வத்தை தீபாவளி அன்று வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஏதேனும் குலதெய்வ சாபம் இருக்கும் பட்சத்தில் அதுவும் நீங்கும். குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் நடக்க வேண்டிய அனைத்து விதமான நன்மைகளும் அதற்குரிய காலத்தில் நல்லவிதமாக நடந்திடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.