காய்கறிகள் இல்லாமல் காக்கா முட்டை ‘தோசை பீட்சா’ 10 நிமிடத்தில் செய்வது எப்படி?

காக்கா முட்டை திரைப்படத்தில் வரும் அந்த பாட்டியோட ‘தோசை பீட்சா’ அனைவரையும் கவர்ந்தது. பீட்சாவை விட தோசையே எவ்வளவோ மேல் என்பது போல அந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சியை பார்த்த பிறகு எல்லோருக்குமே ‘தோசை பீட்சா’ செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கும். தோசையில் எவ்வளவோ வகைகள் இருந்தாலும் பீட்சா போல பார்ப்பதற்கு அழகாக செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கூடுதல் தோசைகள் சாப்பிடுவார்கள். இதற்கு சட்னி கூட தேவையில்லை. எந்த விதமான காய்கறிகளும் சேர்க்காமல் தோசை பீட்சா சுலபமாக பத்தே நிமிடத்தில் எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

pizza-dosa

தோசை பீட்சாவில் பொதுவாக கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள் போன்ற காய்கறிகளை வைத்து செய்யலாம். ஆனால் விரைவாக செய்ய வேண்டிய நேரத்தில் இது போல் வெறும் வெங்காயம், தக்காளியை மட்டும் வைத்து காய்கறிகள் இல்லாமல் சுலபமாக செய்து விடலாம். வெங்காயம், தக்காளி காய்கறி லிஸ்டில் சேராதா? என்று கேட்காதீர்கள். வெங்காயம், தக்காளி எப்பொழுதுமே நம்மிடம் இருக்கும். மற்ற காய்கறிகளை தேட வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? சரி வாருங்கள், தோசை பீட்சா செய்யப் போவோம்!

தோசை பீட்சா செய்ய தேவையான பொருட்கள்:
தோசை மாவு – 2 குழிக்கரண்டி,
பெரிய வெங்காயம் – 1,
தக்காளி – 1 ,
பச்சை மிளகாய் -1,

dosa

மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி,
சீரகத் தூள் – 1 தேக்கரண்டி,
கொத்தமல்லி, கறிவேப்பிலை – பொடிப் பொடியாக நறுக்கியது,
முட்டை – 1,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.

- Advertisement -

தோசை பீட்சா செய்முறை விளக்கம்:
முதலில் பெரிய வெங்காயத்தை மற்றும் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெல்லியதாக நறுக்கி பாருங்கள். அப்போது தான் பார்ப்பதற்கு மற்றும் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். பின்னர் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

dosai-maavu

பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து நெருப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். தோசைக் கல் சூடானதும், இரண்டு கரண்டி அளவிற்கு தோசை மாவு ஊற்றி ஊத்தாப்பம் போல் தடிமனாக சுற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மாவு காயும் முன் அதன் மீதே முட்டையை ஊற்றி கொள்ளுங்கள். முட்டையின் மேலே சீரக தூள் மற்றும் மிளகு தூள் தேவையான அளவிற்கு தூவிக் கொள்ளுங்கள். முட்டை மற்றும் காய்கறிக்காக சிட்டிகை அளவு உப்பு தூவிக் கொள்ள வேண்டும்.

dosai-pizza1

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை உங்களுக்கு விருப்பமான அளவில் சேர்த்து வேக விடுங்கள். அதன் பின் தோசையை திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வேக விடுங்கள். சில வினாடிகள் கழித்து திருப்பி எடுத்து தட்டில் சூடாக வைத்து சுவையான தோசை பீட்சாவை பரிமாறலாம். முட்டை சேர்க்க விருப்பமில்லாதவர்கள் அப்படியே செய்யலாம். அதுவும் நன்றாகத் தான் இருக்கும். காய்கறிகள் சேர்க்க விரும்புவோர் உங்களுக்கு தேவையான காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி இவற்றோடு சேர்த்து செய்து பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த சப்பாத்தி செய்வது இவ்வளவு ஈசியா? 10 நிமிடத்தில் தக்காளி பராத்தா செய்வது எப்படின்னு நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.