சமயத்தில் மலிவாக நிறைய முருங்கைக்காய் கிடைக்கும். மூன்று முருங்கைக்காய் 10 ரூபாய், 4 முருங்கைக்காய் 10 ரூபாய் என்று கூட வாங்கி வருவார்கள். அதை குழம்பு வைத்தாலோ பொரியல் செய்தாலோ வீட்டில் இருப்பவர்கள் விருப்பமாக சாப்பிட மாட்டார்கள். சில சமயம் அந்த காய் காய்ந்து போய் குப்பைக்குத்தான் போகும். ஆனால் அந்த முருங்கைக்காயில் உள்ளே இருக்கும் அந்த சதையை மட்டும் எடுத்து சூப்பரான ஒரு கிரேவி செய்யப் போகின்றோம். இந்த கிரேவி கறி குழம்பு சுவையில் சும்மா அட்டகாசமா இருக்கும். வாங்க அந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்ளும்.
செய்முறை
முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் முருங்கைக்காயை எல்லாம் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டி வேகவைத்து உள்ளே இருக்கும் சதையை மட்டும் ஸ்பூனால் சீவி தனியாக எடுக்க வேண்டும். இதை வேக வைப்பது உங்களுடைய சௌகரியம்.
குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேகவைத்தும் சதைகளை எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் இட்லி பானையில் வைத்தும் ஆவியில் இந்த முருங்கை காய்களை வேக வைத்து, உள்ளே இருக்கும் சதைகளை எல்லாம் எடுத்துக் கொள்ளலாம். குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் அந்த தண்ணீரை கீழே ஊற்றாதீங்க. சூப் செய்து குடித்து விடுங்கள். அதில் முருங்கைக்காயில் சத்து இறங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இப்போது முருங்கைக்காயில் இருந்து எடுத்த அந்த சதைப்பகுதி தனியாக இருக்கட்டும். முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் பல்ப்(pulp) என்று கூட சொல்லலாம். அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் 2 கைப்பிடி அளவு, பட்டை 1 சின்ன துண்டு, லவங்கம் 2, சோம்பு 1 ஸ்பூன், கசகசா 1/2 ஸ்பூன், மிளகு 1 ஸ்பூன், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுது போல அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன், ஊற்றி இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன், போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, பொடியாக நறுக்கிய தக்காளி பழம் 1, போட்டு நன்றாக வதக்குங்கள். மிளகாய் தூள் 1 ஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் 2 சிட்டிகை, போட்டு இந்த கிரேவிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை இதில் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். (இந்த இடத்தில் மிக்ஸி ஜாரை கழுவி கொஞ்சம் தண்ணீர் ஊற்றலாம்.)
தேங்காய் விழுதில் பச்சையாக அரைத்து இருக்கும் பட்டை லவங்கம் சோம்பு மிளகு வாசனை எல்லாம் நீங்கிய பிறகு, இதில் நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் முருங்கைக்காய் சதையை போட்டு நன்றாக கலந்து விட்டு, தேவைப்பட்டால் கிரேவிக்கு இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் போல கொதிக்க விட்டு மேலே கொத்தமல்லி தலையை தூவினால் கம கம வாசத்தோடு ஒரு கிரேவி தயார்.
இதை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். இது முருங்கைக்காய் குழம்பே இல்லை. கறி குழம்பு என்றுதான் நாக்கு சொல்லும். அந்த அளவுக்கு சுவை இந்த கிரேவியில் கிடைக்கும். இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படிக்கலாமே: கேரளா பேமஸ் கடலைக்கறி
பின்குறிப்பு: உங்களுடைய வீட்டில் முருங்கைக்காய்க்கு உள்ளே இருந்து எடுத்த சதை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கு தகுந்தது போல தேங்காய், மிளகாய் தூள், உப்பு, வெங்காயம் தக்காளி என்று மற்ற மசாலா பொருட்களின் அளவுகளை எல்லாம் கூட குறைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.