பத்து நிமிடத்தில் பஞ்சு போல சுவையான பிடி கொழுக்கட்டை செய்ய இந்த உபயோகமான டிப்ஸை உடனே முயற்சி செய்து பாருங்கள்

pidi-kozhukattai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை நாட்களிலோ அல்லது சில விசேஷ நாட்களிலும் பிடி கொழுக்கட்டை செய்வது வழக்கம். அல்லது குழந்தைகளுக்கு மாலை வேளையில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்ய வேண்டியிருந்தாலும் பிடி கொழுக்கட்டை செய்து கொடுப்பார்கள். ஆனால் இந்தக் கொழுக்கட்டை பலரது வீடுகளில் செய்யும் பொழுது சற்று கடினமாக, கடித்து சாப்பிடுவதற்கு சாஃப்டாக இல்லாமல் இருக்கும். பலமுறை முயற்சி செய்தும் அவர்களால் சாப்டான கொழுக்கட்டை செய்ய முடிவதில்லை. என்ன தான் நமது பாட்டி காலத்தில் செய்த முறையை பின்பற்றி செய்தாலும் அவர்கள் செய்த அதே சுவையில் அதே பக்குவத்தில் இப்பொழுது உள்ளவர்களால் செய்ய முடிவதில்லை. ஆனால் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள எளிய டிப்ஸை பின்பற்றி இந்த பிடி கொழுக்கட்டை செய்யும் பொழுது மிகவும் சுவையாகவும், சாஃப்டாகவும் இருக்கும். வீட்டில் உள்ள அனைவரும் இதனை விருப்பமாகவும் சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், பாசிப்பருப்பு – 2 ஸ்பூன், நெய் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு சிட்டிகை, தேங்காய் – அரை மூடி.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரை மூடி தேங்காயைத் துருவி, கால் கப் தேங்காய் துருவல் இருக்குமாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு கடாயை வைத்து, முக்கால் கப் வெல்லம், ஒரு கப் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெல்லம் கரைந்தவுடன் ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வெல்லக் கரைசலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் அதே கடாயை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, பாசிப் பருப்பை நெய்யில் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் வெல்லக் கரைசலை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து விட்டு, அதன் பின்னர் ஒரு கப் அரிசி மாவை இதில் சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியை வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும். அரிசி மாவு முழுவதும் இதில் சேர்த்துக் கலந்து விட்ட உடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பின்னர் இதனை சிறிது நேரம் கரண்டியைப் பயன்படுத்தி நன்றாக கலந்து விட்டு, கை பொறுக்கும் சூடு வந்ததும் ஒருமுறை நன்றாக பிசைந்து கொண்டு, ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கொழுக்கட்டை பிடித்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பின் மீது இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பிறகு இட்லி தட்டில் ஒரு துணியை ஈரமாக நனைத்து விரித்துக் கொள்ள வேண்டும்.பின்னர் பிடித்து வைத்த கொழுக்கட்டைகள் அனைத்தையும் இந்த தட்டின் மீது வைத்து, இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, மூடி போட்டு மூடி, பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான பிடி கொழுக்கட்டை தயாராகிவிட்டது. இதனை சுட சுட மற்றவர்களுக்கு பரிமாறி கொடுத்துப் பாருங்கள். மிகவும் சாஃப்ட்டாகவும், நல்ல சுவையாகவும் இருக்கும்.

- Advertisement -