இன்னும் உங்களுக்கு ரசம் கூட வைக்க தெரியலையா? அப்படின்னா இப்படி ஒருமுறை ரசம் வெச்சி பாருங்க நீங்களே ரசிச்சு சாப்பிடுவீங்க!

tamarind-tomato-rasam
- Advertisement -

எல்லோருக்கும் எல்லா விஷயமும் தெரிந்து விடுவதில்லை, ஒரு சிலருக்கு எல்லா சமையல் வகைகள் தெரிந்து இருந்தாலும், இந்த சாதாரண ரசம் வைக்க தெரிவதில்லை. விதவிதமான ரசம் இருக்கும் பொழுது இந்த முறையில் ஒரு முறை நீங்கள் ரசம் வைத்துப் பாருங்கள், ரொம்ப சூப்பரான சுவையுடன் இருக்கும். எளிய முறையில் சுவையான இந்த ரசம் வைப்பது எப்படி? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ரசம் வைக்க தேவையான பொருட்கள்:
புளி – எலுமிச்சை அளவு, பெரிய தக்காளி – ஒன்று, வர மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பூண்டு பற்கள் – 10, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன்.

- Advertisement -

ரசம் செய்முறை விளக்கம்:
முதலில் ரசம் வைக்க எலுமிச்சை அளவு புளியை உருட்டி எடுத்து கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் நன்கு ஊறிய பின்பு கரைத்து வைத்து கைகளால் வடிகட்டி கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் ஒரு பெரிய அளவிற்கு பழுத்த தக்காளி ஒன்றை நன்கு சுத்தம் செய்து கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு, பூண்டு பற்கள் தோலுடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவற்றுடன் இரண்டு வர மிளகாயை காம்புடன் அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நைஸாக இல்லாமல் சற்று கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிசைந்து வைத்துள்ள தக்காளி பழத்துடன் இந்த விழுதையும் சேர்த்து கைகளால் பிசைந்து கொள்ளுங்கள். இதில் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிதளவு கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு பச்சை மிளகாய் சேர்க்கலாம். இந்த எல்லாவற்றையும் கைகளால் பிசைந்து கையை அதிலேயே கழுவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளித் தண்ணீரில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் கொஞ்சம் சீரகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.

தாளிப்பு முடிந்ததும் நீங்கள் கரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் மிளகு, சீரக விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இவற்றின் பச்சை வாசனை போக நன்கு கொதித்ததும், நீங்கள் புளித்தண்ணீரை இறுதியாக சேர்க்க வேண்டும். இப்படி எல்லாம் கொதித்த பிறகு புளித்தண்ணீரை சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு ரசம் கசப்பு தட்டாமல், ரொம்பவே சுவையாக இருக்கும். பிறகு ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து சுடச்சுட சாதத்துடன் பரிமாற வேண்டியது தான். ரொம்பவே எளிதான முறையில் செய்யப்படும் இந்த தக்காளி ரசத்தை நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -