குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தா போதும் 5 நிமிடத்தில் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா உங்க வீட்டிலேயும் ரெடி!

veg-kurma2
- Advertisement -

கமகமக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா எப்படித்தான் செய்கிறார்களோ? என்று யோசிப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும். இந்த குருமாவிற்கு தேவையான காய்கறிகளை மட்டும் நறுக்கி வைத்தால் போதும், ஐந்தே நிமிடத்தில் குருமாவை குக்கரில் 2 விசில் விட்டு எடுத்திடலாம். இந்த குருமா சாதத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் சூப்பராக இருக்கும். குறிப்பாக சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ள செம காம்பினேஷன்! சுவையான வெஜிடபிள் குருமா எளிதாக செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வெஜிடபிள் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் – அரை கப், சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன், முந்திரி பருப்பு – 10, பட்டை – 3, கிராம்பு – 4, ஏலக்காய் – 1, அன்னாசிப்பூ 1, கல்பாசி – 1, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – ஒன்று, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், தக்காளி – 1, புதினா – ஒரு கைப்பிடி, பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பட்டாணி – ஒரு கப் அளவிற்கு, மிளகாய் தூள் – ஒன்றரை டீஸ்பூன், மல்லி தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலா – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

வெஜிடபிள் குருமா செய்முறை விளக்கம்:
முதலில் அரைக்க வேண்டியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு தேங்காயை துண்டுகளாக நறுக்கி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 10 முந்திரி பருப்புகள், ஒரு துண்டு பட்டை, ஒரு துண்டு கிராம்பு மட்டும் சேர்த்து நைசாக தண்ணீர் தேவையான அளவிற்கு ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் மீதமிருக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி ஆகிய பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் 2 பச்சை மிளகாய்களை சேர்த்து வதக்குங்கள். இப்போது பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் வதங்கி வரும் பொழுது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போக வதக்கிய பின்பு பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளியுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு புதினா இலை சேர்த்து வதக்குங்கள். இவை அனைத்தும் நன்கு மசிய வதங்கிய பின்பு பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஒரு கப் அளவிற்கு சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

மசாலாக்களின் பச்சை வாசம் போக வதக்க வேண்டும். இப்போது குருமாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பச்சை வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து வதக்குங்கள். பின்னர் இந்த குருமாவிற்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குக்கரை மூடி 2 விசில் விட்டு எடுத்தால் போதும், கமகமக்கும் ஹோட்டல் ஸ்டைல் குருமா ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும். நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி சாதத்திற்கு மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.

- Advertisement -