தின்ன தின்ன திகட்டாத எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? சமையல் தெரியாதவர்கள் கூட செய்து அசத்தலாம் வாங்க!

ennei-kathirikkai
- Advertisement -

சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது ரொம்பவே சுலபம் தான்! மசாலா வகைகளை சரியான அளவுகளில் சேர்த்து திக்காக இதே மாதிரியான முறையில் நீங்களும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ஒருமுறை செஞ்சி பாருங்க, சாப்பிட சாப்பிட உங்களுக்கு சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோணும். டேஸ்டியான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி எளிமையாக செய்யலாம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – ரெண்டு, பூண்டு பல் – 7, இஞ்சி – சிறு துண்டு, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், குழும்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – இரண்டு டீஸ்பூன், தனியா தூள் – ஒரு டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ, கடுகு – அரை ஸ்பூன், சின்ன வெங்காயம் – அரை கப், கருவேப்பிலை – ஒரு கொத்து, புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு.

- Advertisement -

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் கால் கிலோ அளவிற்கு பிஞ்சு கத்திரிக்காயாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதன் அடிப்பாகத்தில் இருந்து பாதி அளவிற்கு நான்கு புறமாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். உள்ளே ஸ்டஃப் செய்ய வேண்டும். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், ஏழு பூண்டு பற்களை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய பூண்டு பற்களாக இருந்தால் நான்கு சேர்த்தால் போதும்.

பின்னர் அரை இன்ச் அளவிற்கு இஞ்சியை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இவை வதங்கியவுடன் இரண்டு தக்காளி பழங்களை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொஞ்சம் உப்பு போட்டு மசிய வதங்க விடுங்கள். பிறர் சீரகம், மிளகு, சோம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி விடுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், நிறம் கொடுக்க காஷ்மீரி சில்லி பவுடர், தனியாத்தூள் ஆகியவற்றை மேற்கூறிய அளவின் படி சேர்த்து மசாலா வாசம் போக வதக்கி விட வேண்டும். மசாலா வாசம் போனதும் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி கொடுங்கள். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள்.

- Advertisement -

பின் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வாருங்கள். இதற்கு தண்ணீர் எதுவும் சேர்க்கக்கூடாது. அரைத்த இந்த மசாலா கலவையை நீங்கள் வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய்களில் ஸ்டப் செய்ய வேண்டும். மசாலாவை உள்ளே திணித்து மேல்புறமும் கொஞ்சம் பூசி விட வேண்டும். மீதம் இருக்கும் மசாலாவை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் குழம்புக்கு தேவை. சிறிய எலுமிச்சை பழம் அளவிற்கு புளியை ஊற வைத்து தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலி வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்னர் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பொறிந்ததும் சின்ன வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்த்து நன்கு ரெண்டு நிமிடம் வதக்கிய பின்பு நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்க வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது நீங்கள் ஊற வைத்துள்ள புளியை கரைத்து ஊற்ற வேண்டும். குழம்பு கெட்டியாக வர வேண்டும் எனவே தண்ணீரை அதிகம் சேர்க்க கூடாது. உங்களுக்கு என்ன பதத்தில் தேவையோ, அந்த அளவிற்கு சேர்த்தால் மட்டும் போதும். தண்ணீர் சேர்த்ததும் மூடி வைத்து ஒரு ஐந்து நிமிடம் அப்படியே கொதிக்க விடுங்கள். இப்போது ஸ்டஃப் செய்து வைத்துள்ள கத்திரிக்காய்களை இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் சேர்த்து முறுவலாக சுருள வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குழம்பு கொதித்து கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள கத்திரிக்காய் மசாலாவையும் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பிறகு ஐந்து நிமிடம் அப்படியே திறந்த நிலையில் வேக வையுங்கள். எண்ணெய் தெளிந்து கத்திரிக்காய் மிதக்க ஆரம்பிக்கும். அவ்வளவுதாங்க, சூப்பரான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரொம்ப டேஸ்டா ஈஸியா இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -